மாதர்களுக்கான மார்க்கத் தீர்வுகள் - விகாயா (ஷரயியா)

சில சகோதரிகள் திருமண வைபவங்களின் போதும் அது அல்லாத மாலை நேர வகுப்பு, நோய் போன்ற காரணங்களினாலும் தங்களின் தொழுகையை பிற்போட்டு கழாச் செய்வதை காண்கின்றோம். இது சரிதானா? இதை எவ்வாறு செய்ய வேண்டும்?

விடை:

அல்லாஹ் சூரத்துன் நிஷாவின் 103வது வசனத்தில்.
'நிச்சயமாக தொழுகை விசுவாசிகளின் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக ஆகி விட்டது' எனக் குறிப்பிடுகின்றான்.

இந்த அடிப்டையிலேயே இஸ்லாம் நிர்ப்பந்த நிலைக்கான தொழுகை முறைகளையும் வழிகாட்ட மறந்து விடவில்லை. உதாரணமாக நோயாளிகளுக்கு நின்று தொழ முடியாவிடின் இருந்து தொழும்படியும், இருந்து தொழ முடியாவிடின் சாய்ந்து தொழும்படியும், அதுவும் முடியாவிடின் சைகையின் மூலம் தொழும்படியும் ஏவியுள்ளது. அது மாத்திரமின்றி யுத்த களத்தில் நிற்கும் போதே (அச்சத் தொழுகை) 'ஸலாத்துல் ஹவ்ப்' தொழும்படி ஏவியுள்ளது.

இவ்வாறு இஸ்லாம் ஏற்படுத்தித் தந்த வழிமுறைகளும் சலுகைகளும் தொழுகையை நேரத்திற்கு நிறைவேற்றுவதன் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றது.

தொழுகை தவறுவதற்கான காரணங்களாக மறதி மற்றும் தூக்கம் ஆகியைவைகளே மார்க்கம் ஏற்றுக் கொள்ளும் காரணிகளாகும்.

ஏனெனில் மறதி, தூக்கம் ஆகியவை ஒருவனின் சக்திக்கு அப்பாற்பட்டதாகும்.

'அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒருவர் ஒரு தொழுகையைத் தொழ மறந்து விட்டால் அல்லத தொழாமல் உறங்கிவிட்டால் அதன் நினைவு வந்ததும் அதைத் தொழுது கொள்வது அதற்குரிய பரிகாரமாகும்' நூல் : முஸ்லிம்)

மேலும் ஹைபர் போரின் பின் நடந்த ஒரு சம்பவம் இதற்கு இன்னும் வலுவூட்டுகின்றது. அதாவது

'போரிலிருந்து திரும்பிய ரசூலுள்ளாவும், அவரின் தோழர்களும் களைப்பின் காரணமாக ஓய்வெடுத்த போது உறக்கம் மேலிட்டதால் கண்ணயர்ந்து விட்டார்கள். சூரிய ஒளி தம்மீது படும்வரை அவர்கள் விழிக்கவில்லை. பின்னர் திடுக்கிட்டு எழுந்து 'பஜர்' தொழுகையை நிறைவேற்றினார்கள்'(நூல் : முஸ்லிம் 1211)

மேற்கூறப்பட்ட ஹதீஸை வைத்து எங்களின் சாதாரண அற்ப காரணங்களைச் சாட்டுக் காட்டி தொழுகையை பிற்படுத்தி தொழ முடியாதென்பது புலனாகிறது. ஒருவர் மறதி, தூக்கம் அல்லாமல் வேண்டுமென்றே தொழுகையை விட்டாரேயாயின் அவர் அதற்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடிக் கொள்வார்.

அவர் தவற விட்ட தொழுகையை மீட்டிக் கொள்ளத் தேவையில்லை (அதாவது 'கழா'ச் செய்யத் தேவையில்லை.

ஏனெனில் தொழுகை நேரம் குறிக்கப்பட்டதாகும்.

இதனால் தான் மாதவிலக்குடைய பெண் தான் ரமழான் மாதத்தில் விட்ட நோன்புகளை வேறு நாட்களில் நிறைவேற்றுவதைப் போன்று தான் விட்ட தொழுகையை வேறு நேரத்தில் நிறை வேற்றுவதில்லை.

இன்று எம்மில் அதிகப் பெண்கள் 'கழாச்' செய்தல் என்பதை அனுமதியாக எடுத்துக் கொள்வதால் தான் தொழுகை நேரத்தைப் பிற்போடக் கூடியவர்களாக நாம் காண்கிறோம். இவர்கள் தொழுகையை பிற்போடுவதற்காக முன்வைக்கும் மாலை நேர வகுப்புக்கள், திருமணவைபவங்கள் எனும் காரணிகள் நிர்ப்பந்த நிலைக்குரியதாக கருதப்பட மாட்டாது.


உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்...