இத்தாவும் அதன் சட்டங்களும் - பாகம் 04 - விகாயா பின்து நூறு முஹம்மட் அஷ்ஷரயியா

நியாயமான கொடுப்பனவு
மஹர் தொகை இன்னும் நிர்ணயிக்கப்படாத நிலையில் கணவனால் தீண்டப்படாத பெண், விவாகரத்துச் செய்யப்பட்டால் அக்கணவன் தனது வசதிக்கு ஏற்ப நல்ல முறையில் அவளுக்கு ஏதேனும் ஒரு கொடுப்பனவைக் கொடுக்க வேண்டும். மாறாக ஏற்கனவே அவளுக்கான மஹர்த்தொகை பேசப்பட்டுவிட்டால் அதில் அரை வாசியைக் கொடுக்க வேண்டும். இதனையே சூறத்துல் பகறாவின் 236வது வசனம் சுட்டிக்காட்டுக்கின்றது.

'நீங்கள் (உங்கள்) மனைவியரை தீண்டாமலோ அல்லது அவர்களுக்கு மஹரை நிர்ணயம் செய்யாமலோ அவர்களை விவாகரத்துச் செய்வது உங்கள் மீது குற்றமில்லை. எனினும் வசதியுள்ளவர் தனது வசதிக்கேற்பவும், ஏழை தனது வசதிக்கேற்பவும் சிறந்த முறையில் அவர்களுக்கு வசதி வாய்ப்பைச் செய்வது கடமையாகும். இது நல்லோர் மீது கடமையாகும்.' மேலும், இப்பெண்ணை தலாக் சொல்ல நாடும் அக்கணவன் அவளின் மாதவிடாய் அல்லாத காலத்தில்தான் தலாக் சொல்ல வேண்டும் என்பதும் இல்லை. இதுவே 'இமாம் ஷாபிஈ' போன்றவர்களின் கருத்தாகும்.

மேற்கூறியவை ஒருகணவன் தன் மனைவியை மணவிலக்குச் செய்யும்போது கவனிக்கப்பட வேண்டிய விடயங்களாகும். இந்த முறைகளைக் கைவிட்டுவிட்டு கண்டதெற்கெல்லாம் தலாக் சொல்வதும், முன்று தலாக்குகளையும் ஒரே மூச்சில் சொல்வதும் முறைகேடான விடயமாகும்.

இதையும் மீறி ஒருவர் 'உன்னை நான் முத்தலாக் செய்து விட்டேன்' என்றோ அல்லது 'உன்னை நான் தலாக் செய்து விட்டேன்' என்ற வார்த்தையை மும்முறை பயன்படுத்தியோ மூன்று தலாக்குகளையும் ஒரே தடவையில் சொன்னாராயினும் அது ஒரு தலாக்காகவே கணிக்கப்படும். இவ்வாறே நபியவர்களின் கால நடைமுறை இருந்ததாக இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் கூறுகிறார்கள். (காண்க:- முஸ்லிம்)

தலாக் விடப்பட்ட பெண்ணின் இத்தா

இஸ்லாம் கணவனால் மணவிலக்கு செய்யப்பட்ட ஒரு பெண்ணிற்கென ஒரு குறிப்பிட்ட கால இத்தாவை கடமையாக்குகின்றது. அவள் அதை நிறைவேற்றிய பின்னரே மறுமணத்தில் நுழைந்து கொள்வாள்.

' தலாக் சொல்லப்பட்ட பெண்கள் மூன்று (குர்உ) மாதவிடாய் காலம் காத்திருப்பாள்.' (2:228)

மேற் சொன்ன வசனம் தலாக் விடப்பட்ட பெண்கள் இத்தாவின் விடயத்தில் கவனமாக இருந்து இவ்வழிபாட்டை நிறைவேற்ற வேண்டும் என சொல்லித்தருகின்றது. எனினும் அப் பெண் இன்னும் மாதவிடாய் ஏற்படாதவளாகவோ அல்லது அதில் இருந்து நிராசை அடைந்தவளாகவோ இருந்தால் அவள் மூன்று மாத காலம் வரை இத்தா இருப்பாள். (காண்க:- 64 : 4)

அவள் கற்பினியாக இருந்தால் தனது கருவில் உள்ள குழந்தையை பெற்றெடுக்கும் வரை இத்தாவில் இருப்பாள் என 'கற்பம் உள்ள பெண்கள் தமது கற்பத்தை வைப்பதுதான் அவர்களுக்குரிய (இத்தாவின்) தவணையாகும்.' என்ற சூரத்துல் 'தலாக்கின்' நான்காவது வசனம் தெளிவுபடுத்துகின்றது. இவ்வாறே அவர்கள் தாங்கள் கருவுற்றிருப்பதை மறைப்பது அவர்களுக்கு ஆகுமானதல்ல என்பதையும் அல் - குர் ஆன் குறிப்பிடுகின்றது.

இத்தா இல்லாத தலாக்

கணவனோடு தாம்பத்திய வாழ்வில் இணையாத பெண்கள் தலாக் சொல்லப்பட்டால் அவர்கள் இத்தா இருக்க வேண்டியதில்லை.

'நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் பெண்களுடன் திருமண ஒப்பந்தம் செய்து அவர்களைத் தீண்டுமுன் நீங்கள் தலாக் செய்து விட்டால் அவர்கள் உங்களுக்காக இருக்க வேண்டிய எந்த இத்தாவும் அவர்கள் மீது கடமையில்லை.' (33 : 49)

ஜீவனாம்ச வசதி செய்தல்:-

மீட்டிக் கொள்ளத்தகுமான தலாக் (தலாக் ரஜஈ) செய்யப்பட்டவர்களுக்கான வசதி

ஒரு கணவன் தான் முதலாம் அல்லது இரண்டாம் தலாக் சொன்ன பெண்ணை இத்தா காலத்தில் மீட்டி எடுக்க உரிமையுடையவன் என்பதால் அவனே அவளின் செலவுகளையும் தங்குமிட வசதியையும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது இறைச் சட்டமாகும். அதிலும் தான் வசிக்கும் இடத்திலேயே அவளை வசிக்க வைக்க வேண்டும் என்பது பின்வரும் மறை வசனத்தின் தீர்ப்பாகும்.

'உங்களுடைய வசதிக்குத் தக்கவாறு நீங்கள் குடியிருந்துவரும் இடத்தில் அவர்களைக் குடியிருக்கச் செய்யுங்கள்.' (அத் - தலாக் : 06)

மேலும், அல்லாஹ் 65 : 1இல் இத்தீர்வின் உள்நோக்கத்தையும் முக்கியத்துவத்தையும் குறிப்பிடுகின்றான்.

'நபியே பெண்களை விவாகரத்துச் செய்தால் அவர்களின் இத்தாவிற்குரிய காலத்தில் அவர்களை விவாகரத்துச் செய்யுங்கள். நீங்கள் இத்தாவைக் கனித்துக் கொள்ளுங்கள். உங்கள் இரட்சகனாகிய அல்லாஹ்வை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள். அவர்க(ள் வசிக்கும் உங்க)ளின் வீட்டை விட்டும் அவர்களை வெளியேற்ற வேண்டாம். மானக்கேடான ஏதேனும் தவறுகளை அவர்கள் புரிந்தாலேயன்றி அவர்கள் தாமாக வெளியேற வேண்டாம். இவை அல்லாஹ்வின் வரம்புகளாகும். எவர் அல்லாஹ்வின் வரம்புகளை மீறுகின்றாரோ நிச்சயமாக அவர் தனக்கே அநீதி இழைத்துக் கொண்டார். இதன் பின்னர் அல்லாஹ்

'ஏதேனும் ஒரு காரியத்தை புதிதாக உருவாக்கலாம் என்பதை நீர் அறியமாட்டீர்' (65:01)

ஆக, இதன் நோக்கம் அக்காலகட்டத்திற்குள் அவர்கள் இருவரும் தத்தமது குறைகளை உணர்ந்து மற்றவர்களின் நற்செயற்பாடுகளை நினைவு கூறி, விட்டுக்கொடுத்து வாழ முன்வருவதற்கான ஒரு சந்தர்ப்பத்தை அளிப்பதேயாகும். எனினும், இன்று எம்மவர்களுக்கிடையில் இத்தாக்கால கட்டமானது தம்பதியினருக்கிடையில் மேலும் மேலும் பிரிவினையையும், மனக்கசப்புக்களையும் அதிகப்படுத்தி அவர்கள் சேர்வதற்கு தடையாக அமைகின்றது. இதன் காரணம் இங்கு அடிப்படையிலேயே இறைசட்டம் மீறப்படுவதாகும்.

அதாவது ஒரு கணவன் தன் மனைவியை தனது வீட்டில் வசிக்க வைக்க வேண்டும் என்ற இறைசட்டம் தலைகீழாக மாறி மனைவியின் வீட்டில் கணவன் தஞ்சம் புகும் அவல நிலையே இதன் தலையாய காரணியாக விளங்குகின்றது. இதுவே எத்தனையோ இல்லற வாழ்க்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றது என்பதை எம்மால் மறுக்க முடியாது.

மேலும், கற்பினித்தாய்மார்கள் தங்களின் கற்பத்திலுள்ள சிசுவை பெற்றெடுக்கும்வரை அவர்களுக்கான தங்குமிட வசதியைச் செய்து அவளின் செலவுகளையும் பொறுப்பேற்பது கணவனின் கடமையாகும். (காண்க: அத் - தலாக் - 06)

மூன்றாவது தலாக் (தலாக் பாயின்) விடப்பட்ட பெண்ணின் ஜீவனாம்சம்

மூன்றாவது தலாக் சொல்லப்பட்ட பெண், தான் மற்றுமொரு கணவரை திருமணம் செய்யும்வரை முந்திய கணவனுக்கு ஆகுமானவளாக மாட்டாள். அவர்களுக்கிடையில் எவ்வித தொடர்புகளும் இருக்காது. இதனால் அவளின் கணவன் அவளுக்கான செலவுகளைக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை நபியவர்களின் காலத்தில் நடந்த கீழ்வரும் சம்பவம் உணர்த்துகின்றது.

'பாத்திமா பின்த் கைஸ் அவர்களின் கணவர் அபூ அம்ர்பின் ஹப்ஸ் என்பவர் ஊரில் இல்லாது (பொறுப்பாளர் ஒருவர் மூலம்) முழுமையான தலாக் கொடுத்திருந்தார். அந்தப் பொறுப்பாளர் இப்பெண்ணுக்கு தொவிக் கோதுமை கொஞ்சம்) அனுப்பிவைத்தார். இதனால் ஆக்ரோஷப்பட்ட அப்பெண் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து (தனது கணவர் செலவுக்கு எதையும் ஏற்பாடு செய்யாது தலாக் கொடுத்த) விபரத்தை முறையிட்டார். அதற்கு நபியர்கள் 'உனக்கு அவர் செலவினம் தரவேண்டிய அவசியம் இல்லை. நீ உம்மு சுரைகின் வீட்டில் இத்தா இரு எனக் கூறிவிட்டு (வேண்டாம்) அது விருந்தினர்கள் அதிகம் வந்துபோகும் வீடாக இருப்பதால் உம்மு மஹ்தூம் வீட்டில் இருந்துகொள் .... எனக் கூறினார்.(புஹாரி, முஸ்லிம்)

பாலூட்டும் தாய்மார்களுக்கான செலவினங்கள்

ஒரு கணவன் தன் மனைவியுடனான பந்தத்தை முறித்துக் கொண்ட போதிலும் அவனிலிருந்து உருவான அவனின் குழந்தைக்கு பாலூட்டும் அவளுக்கு செலவுகளை அவன் வழங்க வேண்டும். '(தலாக் விடப்பட்ட) தாய்மார்கள் தம் குழந்தைகளுக்கு இரண்டு வருடங்கள் பூரணமாக பாலூட்ட வேண்டும் என தந்தை விரும்பினால், பாலூட்டும் (தாய்மார்களாகிய) அவர்களுக்கு நல்ல முறையில் உணவும், உடையும் அளிப்பது பிள்ளையின் தந்தை மீதுள்ள கடமையாகும். எந்த ஒரு ஆத்மாவும் அதன் சக்திக்கு மீறி கஷ்டப்படுத்தப்படமாட்டாது. தாய் தன் பிள்ளைக்காகவோ, தந்தை தன் குழந்தைக்காகவோ சிரமத்திற்கு உள்ளாக்கப்படமாட்டார்கள். (தந்தை மரணித்து விட்டால்) இது போன்ற கடமை அவரது வாரிசுக்குமுண்டு. அவ்விருவரும் மனம் விரும்பியும் ஆலோசனை செய்தும் பால்குடியை நிறுத்திவிடக் கருதினால் அவ்விருவர் மீதும் எவ்வித குற்றமுமில்லை'(2 : 223)

அலங்காரம் செய்தல்

இத்தாவிலிருக்கும் ஒரு பெண் தான் நாடியவாறு தன்னை அலங்கரித்துக் கொள்வது அவளுக்கு அனுமதியாகும். எனினும் அவள் தன் கணவனின் முன் தன்னை வெளிக்காட்டுவாளா என்பதில் அறிஞர்களுக்கிடையில் மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றது. என்றாலும் அவன் அவளை மீட்டிக் கொள்ளும்வரை அவனின் மனைவி என்ற பதவி சந்தேகத்துக்கிடமானது என்பதால் அவள் தன் அலங்காரங்களை மறைத்துக் கொள்வதே பொருத்தமானதாகும். அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

வெளியேறுதல்

தலாக் ரஜஈ (முதலாம், இரண்டாம் தலாக்) சொல்லப்பட்ட பெண்களின் சொல்லப்பட்ட பெண்களின் செலவுகளையும் தங்குமிட வசதிகளையும் அவளின் கணவனே பொறுப்பேற்பான். மேலும், அவனின் வீட்டை விட்டும் அவள் வெளியேறவுமாட்டாள். வெளியேற்றப்படவும் மாட்டாள் என 'அத்தலாக்' வசனம் '01'கூறுகின்றது. இருந்தபோதிலும், தன்கணவனால் மூன்றாவது தலாக் சொல்லப்பட்ட பெண்ணைப் பொறுத்தமட்டில் அவளே அவளின் செலவுகளை ஏற்க வேண்டியுள்ளது. இதனால் அவள் தனது அத்தியவசியத் தேவைகளுக்காக வெளியேறுவதில் குற்றமில்லை. ஜாபிர் (ரழி) அவர்களின் சிறிய தாய் மூன்றாவது தலாக் சொல்லப்பட்ட நிலையில் அவர் வெளியேறி தன் ஈச்சந்தோட்டத்தை அறுவடை செய்ய நபியவர்கள் அனுமதி வழங்கிய சம்பவம் இதற்குச் சான்றுபகிர்கிறது. (இச்சம்பவம் ஏற்கனவே விரிவாக கூறப்பட்டுவிட்டது)

தலாக் ரஜஈயின் இத்தாவின் பின் சேர்ந்து வாழ விரும்பினால்

இத்தா காலத்தில் தன் மனைவியை மீட்டியெடுக்காத ஒரு கணவன் இத்தாவின் பின் மீண்டும் அவளோடு சேர்ந்து வாழ நாடினால் ஏனையவர்கள் அதை தடை செய்வது அனுமதியாகமாட்டாது.(அப்பெண்ணும் கணவனோடு சேர்ந்து வாழ விரும்பும் நிலையில்) இவ்வாறே 'மஃகல் இப்னு யசார் (ரழி) அவர்களின் சகோதரியை அவளின் கணவன் தலாக் சொல்லி அவளின் இத்தா முடியும்வரை (மீட்டியெடுக்காமல்) விட்டுவிட்டு, பின்னர் அவளை மணம் பேசி வந்தார். என்றாலும் 'மஃகல்' அதை மறுத்துவிட்டார். எனவே,

'மேலும் (உங்கள் மனைவிகளான அப்) பெண்களை நீங்கள் தலாக் கூறி அவர்கள் தங்களுடைய (இத்தாவின்) தவணையை அடைந்து (முடிந்து) விட்டால் அவர்களின் கணவர்களை திருமணம் செய்வதிலிருந்து அவர்களுக்கிடையில் அவர்கள் நன்முறையில் திருப்தி கொண்டுவிட்டால், அவர்களை நீங்கள் தடுக்காதீர்கள். உங்களில் எவர் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசம் கொண்டுள்ளாரோ அவர் இதனைக் கொண்டு உபதேசிக்கப்படுகிறார். இது உங்களுக்கு மிகத் தூய்மையானதும் மிக்க பரிசுத்தமானதுமாகும். அல்லாஹ் அறிவான். நீங்களோ அறியமாட்டீர்கள்' என்ற வசனம் இறங்கியது. (புஹாரி: 4529)

இதனடிப்படையில் அவர்கள் புதிய திருமண ஒப்பந்தத்தின் மூலம் இணைந்து கொள்வார்கள்.


உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்...