இத்தாவும் அதன் சட்டங்களும் - பாகம் 02 - விகாயா பின்து நூறு முஹம்மட் அஷ்ஷரயியா

இத்தா வேளையில் ...... . .
துக்க அனுஸ்டானத்தில் ஈடுபடும் ஒரு பெணட தன் துக்கத்தை வெளிப்படுத்தும் முகமாக சில விடயங்களைத் தவிர்ந்திருப்பாள். அதற்காக அவள் தான் வழமையாக தன்னை சுத்தமாக வைத்திருப்பதற்காக பல் துலக்குவதையோ, குளிப்பதையோ, தலை வாரிக் கொள்வதையோ, தன் நகங்களை வெட்டுவதையோ, மறைவிடங்களை சுத்தம் செய்வதையோ இஸ்லாம் தடுக்கவில்லை.

அலங்காரங்களை தவிர்ந்து கொள்ளல்
அலங்காரம் என்பது, ஒரு மனிதன் சந்தோசமாக இருக்கும் வேளையிலோ அல்லது ஒரு குதூகலமான சந்தர்ப்பத்திலோ தான் வழமையாக தன்னை சுத்தமாக வைத்திருப்பதற்கு மேற் கொள்ளும் செயற்பாடுகளுக்கு அப்பால் தன்னை அழகுபடுத்துவதாகும்.

இதனால் தான் துக்கத்திலோ அல்லது பதற்றத்திலோ அல்லது கோபத்திலோ இருக்கும் ஒரு மனிதன் தன் அழகைப்பற்றி கவனிப்பதோ, கவலைப்படுவதோ இல்லை. இவ்வகையில்தான், கணவனை இழந்த ஒரு பெண் தன் துக்கத்தை வெளிப்படுத்தும் முகமாக தன் மேலதிக அலங்காரங்களை தன்னை விட்டும் தவிர்ந்து கொள்கிறாள். இந்த வகையில்,

கண்னிற்கு சுருமா இடுதல்

ஒரு பெண் தன் கண்னை அழகுபடுத்துவதற்காக கண்ணிலிடும் சுருமாவை இஃதாத் காலத்தின்போது தவிர்ந்திருப்பாள். இதை சஹீஹூல் புஹாரி கிரந்தத்தில் பதிவாகியுள்ள உம்மு ஸலமா (ரழி)யின் ஹதீஸ் விளக்குகின்றது.

'ஒரு பெண்ணின் கணவன் மரணித்தார்.(இதற்காக அவள் இத்தா இருக்கும் வேளையில்) அவளின் கண்ணில் நோய் ஏற்பட்டது. எனவே, (அவளின் உறவினர்கள்) நபியிடம் வந்து அவள் சுருமா இடுவதற்காக அனுமதி கேட்டனர். அதற்கு நபியவர்கள், அவள் சுருமா இடமாட்டாள் உங்களில் ஒருவர் (ஜாஹிலியாவில்) கீழ்த்தரமான வீட்டில் தங்கியிருப்பவளாக இருந்தாள்.பின் ஒரு வருட்ம் முடிந்து (விட்டபின்) நாய் அவளை குறுக்கறுக்கும்போது, விட்டையை எறிவாள். (இவ்வாறுதான் தன் துக்க அனுஸ்டானத்திலிருந்து விடுபடுவாள்) எனவே, நான்கு மாதம் 10 நாட்கள் முடியும்வரை சுருமா இடவேண்டாம் எனக் கூறினார்' எனினும் இது அல்லாத வேறு நிவாரணிகளை மேற்கொள்வாள்.

வாசனைத்திரவியங்களை உபயோகித்தல்

அப் பெண் வாசனைத்திரவியங்களைத் தவிர்ந்திருப்பாள் என்றாலும் தான் மாதவிலக்கிலிருந்து சுத்தமடையும் வேளையில் கெட்ட வாடையை நீக்குவதற்காக மணம் பூசுவாள். இதையே உம்மு அதியா (ரழி) அவர்களை தொட்டும் புஹாரியில் பதிவாகியுள்ள ஹதீத் விளக்குகின்றது. உம்மு அதியா (ரழி) கூறியதாவது, 'இறந்து போனவர்களுக்காக மூன்று நாட்களுக்கு மேல் துக்கத்தை வெளிப்படுத்துவதை விட்டும் நாங்கள் தடுக்கப்பட்டுள்ளோம். ஆனால், கணவன் இறந்த பின் அவனது மனைவி நான்கு மாதம் பத்து நாட்கள் துக்கத்தை வெளிப்படுத்த வேண்டும். (அதாவது) இந்த நாட்களில் நாங்கள் சுறுமா இடவோ, மணப்பொருட்களை பூசவோ, நெய்வதற்கு முன் நூலில் சாயமிடப்பட்ட ஆடைகளைத் தவிர சாயமிட்ட ஆடைகளை அணியவோ கூடாது. எங்களில் ஒருத்தி மாதவிடாயிலிருந்து நீங்கிக் குளிக்கும்போது மணப்பொருளைப் பயண்படுத்துவது அனுமதிக்கப்பட்டுள்ளது.....'

வாசனைத்திரவியங்களை உபயோகிப்பது என்பது ஒரு மனிதன் சீரான மனோநிலையில் உள்ளான் என்பதை உணர்த்துகின்றது. இதனாலேயே உம்மு ஹபீபா (ரழி) அவர்கள் 'ஒரு முஃமினான பெண் தன் கணவனல்லாத ஏனையவரின் மரணத்திற்காக மூன்று நாட்களுக்கு மேல் துக்கத்தை வெளிப்படுத்துவது அவளுக்கு ஹலாலாகாது என்ற ஹதீதை நடைமுறைப்படுத்துமுகமாக தன் நெருங்கிய உறவினர் ஒருவர் மரணித்து மூன்று நாட்கள் முடிந்த பின் மணத்தை பூசிக் கொண்டார்'

ஏனைய அலங்காரங்கள்.

இவ்வாறே ஒரு பெண் தன்னை அலங்கரிக்கப்பயண்படுத்தும் வளையல், மாலை மற்றும் ஏனைய ஆபரணங்களை தவிர்ந்திருப்பதுடன் மருதானி, நகப்பூச்சு, உதட்டுச்சாயம் போன்ற அலங்காரங்களையும் தவிர்ந்து கொள்வாள்.

ஆடையலங்காரம்

ஒரு மனிதனின் தோற்றம் அழகு, நிலமை போன்றவற்றை எடுத்துக் காட்டுவதில் ஆடைக்கு பெரியதொரு பங்கு உண்டு. இதையே 'ஆள் பாதி ஆடை பாதி என்பர்' ஒரு மனிதன் எவ்வளவுதான் அழகு குறைந்தவனாக இருந்தாலும் அலங்கரிக்கப்பட்ட ஆடைகளை அணியும்போது, அது அவனுக்கு மேலும் அழகை மேன்மைப்படுத்துகின்றது. இதனாலே என்னவோ இன்று ஆண்களைவிட பெண்கள் ஆடை விடயத்தில் அதிக கவனம் செலுத்துபவர்களாகவும், நவீன முறையில் வடிவமைக்கப்பட்ட ஆடைகளைத் தேடித்தேடி வாங்குபவர்களாகவும் இருப்பதை பார்க்கிறோம். இவ்வகையில் இஸ்லாம் துக்க அனுஸ்டானத்தில் ஈடுபடும் ஒரு பெண் தன் துக்கத்திற்கு ஏற்ற ஆடைமுறையை அணியக்கற்றுக் கொடுக்கிறது. அதனையே மேற்கூறப்பட்ட ஹதீதில் உள்ள இவ்வாசகம் தெளிவுபடுத்துகிறது.

'நெய்வதற்கு முன் நூலில் சாயமிடப்பட்டு தயாரிக்கப்பட்ட ஆடைகளைத்தவிர (ஏனைய) சாயமிட்ட ஆடைகளை அணியவே கூடாது.' நபியவர்களின் இந்த வாசகத்தை வைத்து அறிஞர்களுக்கு மத்தியில் பல கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றது. எனினும் இன்று ஆடைகள் பெரும்பாலும் நெய்வதற்கு முன்னே சாயமிடப்படுகின்றது என்பதால், எல்லா நிறங்களையும் அணியலாம் என எடுத்துக் கொள்ள முடியாது. இந்நிலையில் இவ்வாசகத்தின் நாட்டத்தை பார்க்கும்போது, அது அலங்காரங்களை தவிர்ந்து கொள்வதற்காகத்தான் கூறப்பட்டுள்ளது என தெளிவாக விளங்குகிறது. ஆக ஒரு பெண்ணிற்கு அலங்காரமாக அமையக்கூடிய அனைத்து ஆடைகளையும் அவள் தவிர்ந்திருப்பாள். அது அலங்கரிக்கப்பட்ட வெள்ளை நிற ஆடையாக இருந்தாலும் சரியே. ஆகவே, சாயமிடப்படாத ஆடை என்ற வகையில் வெள்ளை நிற ஆடையை ஒரு பெண் அணிவது அனுமதியாகும். மேலும் நெய்வதற்கு முன் சாயமிடப்பட்ட ஆடைகளில் ஏனைய நிற ஆடைகளைப் போன்று கறுப்பு நிற ஆடை அலங்காரத்திற்கென எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. இதனால் அதையும் அவள் அணிந்து கொள்ளலாம் என்பது பல அறிஞர்களின் கருத்தாகும்.

வெளியில் செல்லுதல்

இஃதாதில் இருக்கும் ஒரு பெண் தனது அத்தியாவசியத் தேவைகளுக்கேயன்றி வெளியேறமாட்டாள். அதாவது தனக்கு உணவளிக்க குழந்தைகளோ, பெற்றோரோ, உறவினரோ இல்லாத ஒரு பெண் தனது வாழ்வை ஓட்டுவதற்கு வெளியேறி சம்பாதித்துத்தான் ஆகவேண்டுமென்ற நிலையில் வெளியேறுவது அனுமதியாகும். தன் கணவனால் மூன்றாவது தலாக் சொல்லப்பட்ட ஒரு நபித்தோழிக்கு நபியவர்கள் இந்த விடயத்தில் அனுமதித்த சம்பவம் பின்வருமாறு.

ஜாபிர் இப்னு அம்தில்லாஹ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார். 'எனது சிறிய தாய் தலாக் செய்யப்பட்டிருந்தாள். அவள் தன் இத்தா காலத்தில் தனது பேரிச்சத் தோட்டத்தை அறுவடை செய்ய நாடியபோது, அவள் வெளியேறுவதை ஒரு மனிதர் தடுத்தார். எனவே, அவள் (இதை முறையிட) நபி (ஸல்) அவர்களிடத்தில் வந்தாள். அதற்கு நபியர்கள், ஆம் நீ உன் பேரிச்சந் தோட்டத்தை அறுவடை செய்து கொள். ஏனென்றால், நீ அதன் மூலம் தர்மம் செய்யவோ, அல்லது நன்மை செய்யவோ கூடும் எனக் கூறினார்' (நூல் - முஸ்லிம்)

மேலும், '(உங்களை நீங்களே ஆபத்திற்குள்ளாக்கிக் கொண்டு) உங்களது கரங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள்' என்ற சூறதுல் பகறாவின் இந்த வசனம் ஒரு பெண் தன் மருத்துவத் தேவைகளை வீட்டில் இருந்தபடியே பூரணப்படுத்த முடியாது. வெளியில்தான் செல்ல வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் வெளியேறுவாள் என்பதை உணர்த்துகிறது. எனினும் அவள் வெளியேறும்போது இஃதாத் சட்டத்தை கடைப்பித்தவளாக வெளியேறுவது அவசியமாகும்.

திருமணம் பேசுதல்

இத்தாவில் இருக்கும் ஒரு பெண்ணிடம் நேரடியாக திருமண ஒப்பந்தம் செய்வதும், அவளுக்கு திருமணத்தில் ஆசையூட்டுவதும் இஸ்லாத்தில் அனுமதிக்கப்படவில்லை. எனினும் அவளின் பொறுப்புதாரியை அனுகுவதோ அல்லது அவளிடம் சூசகமான முறையில் தனது அபிப்பிராயத்தை அவளிடம் எடுத்துக் கூறுவதோ அனுமதியாகும். இதனையே சூறத்துல் பகறாவின் 235ஆவது வசனம் தெளிவுபடுத்துகின்றது.

அல்லாஹ் கூறுகின்றான்,' (இத்தாவில் இருக்கும் யாதொரு பெண்னை நீங்கள் திருமணம் செய்து கொள்ளும் நோக்கத்துடன்) பெண் பேசுவதை நீங்கள் சைக்கினையாக எடுத்துக் கூறுவதிலோ அல்லது உங்கள் மனங்களில் நீங்கள் மறைவாக வைத்திருப்பதிலோ உங்கள் மீது குற்றம் இல்லை. அவர்களை நிச்சயமாக நீங்கள் நினைவு கூறுவீர்கள் என்பதை அல்லாஹ் அறிந்திருக்கின்றான். எனினும் கண்ணியமான முறையில் (கூறுவதைத் தவிர, இத்தாவுடைய காலத்தில் திருமணத்தைப்பற்றி) அவர்களுடன் இரகசியமாக வாக்குறுதி செய்யாதீர்கள். இன்னும் விதியாக்கப்பட்ட அதன் தவணையை அடையும்வரை (இத்தாவின் தவணை முடிவதற்குள், அவர்களை) திருமணம் செய்து கொள்ள உறுதியும் செய்து விடாதீர்கள். உங்களின் மனங்களில் உள்ளவற்றை நிச்சயமாக அல்லாஹ் அறிவான் என்பதை நீங்கள் அறிந்து, அவன் விடயத்தில் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிகுந்த சகிப்புத்தன்மை உடையவன் என்பi; தயும் அறிந்து கொள்ளுங்கள்'

அப்பெண் தன் இஃதாதில் இருந்து விடுபட்டதன் பின் அவள் விரும்பும் பட்சத்தில் திருமணம் முடிப்பதில் எவ்வித குற்றமும் இல்லை.

இத்தா வேலி

இஸ்லாமிய பெண்கள் வசிக்கும் சாதாரண வீடுகளைப்பார்க்க, ஒரு பெண் இஃதாத் இருக்கும் வீடோ பல திரைகளுடனும், வேலிகளுடனும் ஆண்கள் நடமாட்டம் இல்லாமலும் இன்னும் பல பேணுதல்களுடனும் வித்தியாசப்பட்டிருப்பதை இன்று நாம் காண்கிறோம். எதுவரைக்கென்றால், ஒரு கர்ப்பிணிப்பெண் கூட அவளைப் பார்க்க அனுமதிக்கப்படுவதில்லை. காரணம் அவளின் வயிற்றில் உள்ள சிசு ஆணாக இருந்து விடுமோ என்று பயப்படுவதனாலாகும்.

இவ்வாறே, பருவமடையாத ஆண்குழந்தைகளும் இன்னும் அவளுக்கு திருமணம் முடிக்க அனுமதியற்றவர் (மஹ்ரமி)களில் பெரும்பாலாரும்கூட பார்க்கவோ, பேசவோ அனுமதிக்கப்படுவதில்லை.

இதுவெல்லாம் இஃதாத் காலத்திற்கென வரையறுக்கப்பட்ட இறைவனின் வரையறைகள்தானா? என உற்று நோக்குவது அவசியமாகும். ஒரு பெண் தன் சாதாரன நாட்களில் அன்னிய ஆண்களின் முன் சமூகமளித்து அவர்களுடன் வீண்பேச்சுக்கள் பேசுவதை இஸ்லாம் முற்றிலும் தடுக்கிறது. மாறாக அவள் தன்னை திருமணம் செய்ய அனுமதியற்றவர் (மஹ்ரமி)களுடன்தான் தன் அலங்காரங்களை வெளிப்படுத்தல், திரைமறைவில் இருத்தல், தூர இடங்களுக்கு பயணித்தல் மற்றும் தனிமையில் இருத்தல் போன்ற செயல்களில் ஈடுபடலாம். எனினும் இவ்வாறான சட்டங்கள் இஃதாத் காலத்தில் மாத்திரம் பின்பற்றப்படும் ஒரு கிரியையாக மாறிவிட்டது. இதற்குக் காரணம் எம் பெண்களோ ஆண்களோ இஃதாத் அல்லாத நாட்களில் இந்த இறைகட்டளையை புறக்கணித்து அலட்சியம் செய்வதேயாகும்.

இவ்வாறே, ஒரு வயதான மூதாட்டி தன் வழமையான நாட்களில் முக்காட்டை களைவது அனுமதி என்பதை சூறா அந்நூரின் 60வது வசனம் கூறிக்காட்டுகின்றது. ' பெண்களில் திருமண விருப்பமற்ற (மாதவிலக்கு நின்று குழந்தைகள் பெறும் நிலையைத் தாண்டிவிட்ட) முதியவர்கள் தங்கள் அலங்காரத்தை வெளிப்படுத்தாதவர்களாக தங்கள் ஆடைகளை (முக்காடுகளை) களைந்துவிட்டிருப்பது அவர்கள் மீது குற்றமில்லை. அவர்கள் இதனையும் தவிர்த்து பேணிக் கொள்வது மிக்க நன்று. அல்லாஹ்வே கேட்பவனும், நன்கறிபவனும்' இவ்வாறே இஃதாத் காலத்திலும் அவள் இருப்பாள்.

எங்கே இத்தா இருப்பாள்

ஏற்கனவே குறிப்பிட்டதைப்போன்று ஒரு ஆண் தன் மனைவி இத்தாவிருக்கும் இடத்தைப்பற்றி வஸியத் செய்யவேண்டும் என்ற சட்டம் இஸ்லாத்தின் ஆரம்பகட்டத்திலே இருந்தது. பின்னர் வாரிசுரிமைச்சட்டம் இறங்கியதால் இந்தச்சட்டம் மாற்றியமைக்கப்பட்டுவிட்டது. அவள் இந்த இடத்தில்தான் இஃதாத் இருக்கவேண்டும் எனக்குறிப்பிட்டு, எந்தவித ஆதாரமான நபிமொழிகளும் வரவில்லை. எனினும் நபித்தோழர்கள் சிலர் அவள் நாடிய இடத்தில் இத்தா இருப்பாள் என்ற கருத்தையே கூறுவதால், நாம் அதனுடன் நின்று கொள்வதே சிறந்ததாகும். ஒரு பெண் தனது கணவனின் சொத்திலிருந்தும் தன் பங்கைப்பெறுவாள் என்பதால் அவளின் கணவனின் வீட்டில் அவளுக்கென ஒரு பங்கு கொடுக்கப்படும் வேளையில் அங்கு தங்குவாள். மாறாக அவள் அதை விரும்பவில்லை என்றாலோ அல்லது கணவனின் வீட்டில் அவளுக்கு பங்கு கிடைக்காவிட்டாலோ தான் நாடிய இடத்தில் இத்தா இருப்பாள்.

இத்தாவிலிருந்து வெளியேறுதல்

ஒரு பெண் தனது இஃதாதிற்கென வரையறுக்கப்பட்ட கால எல்லை முடிவடைந்து விட்டால், அவள் தன் துக்க அனுஸ்டானத்திலிருந்து விடுபட்டு வழமை நிலைக்குத் திரும்புவாள். அதன்பின் தன் விருப்பத்திற்கேற்ப இறைவன் அனுமதித்த முறையில் அலங்கரித்துக் கொள்வதும் தேவைகளுக்கேற்ப வெளியில் செல்வதும், மறுமணம் செய்வதும் அவளிற்கே உரிய உரிமைளாகும். இதை எவரும் பழிக்கவோ, தடுக்கவோ முடியாது. இதனையே நபிகளாரின் காலத்தில் இஃதாதில் இருந்த கற்பினிப்பெண்ணான சபீஆ(ரழி) அவர்கள் தன் குழந்தையைப் பெற்றெடுத்து இத்தாவிலிருந்து வெளியேறிய சம்பவம் தெளிவுபடுத்துகின்றது.

'சபீஆ அல் - அஸ்லமியா (ரழி) அவர்களிடம் இருந்து தான் கேட்ட சம்பவத்தை உமர் (ரழி) அறிவிக்கிறார்கள், சபீஆ (ரழி)யவர்கள் பனு ஆமிர் கிளையைச் சேர்ந்த சஅத் இப்னு கவ்லா (அவர் பத்ர் போரில் கலந்து கொண்டவர்) என்பவரின்கீழ் (மனைவியாக) இருந்தாள். அப்வேளை சபீஆ (ரழி)யவர்கள் கர்ப்பமுற்று இருக்கும் நிலையிலே அவர் மரணித்து விட்டார். சபீஆ(ரழி) அவர்களோ அவரின் மரணத்தின் பின் சில காலத்திலேயே தன் குழந்தையைப் பெற்றுவிட்டாள். பின் அவர் தனது பிரசவ ருதுவிலிருந்து நீங்கியபோது திருமணம் பேசி வருபவர்களுக்காக தன்னை அலங்கரித்துக் கொண்டார். அவ்வேளை பனு அப்தித்தார் கோத்திரத்தைச் சேர்ந்த அபூ சனாபிலுப்னு பஃகக் என்ற நபித்தோழர் அங்குவந்து 'நான் உன்னை அலங்கரித்துக் கொண்டவளாக காண்கின்றேன்.' நீ திருமணத்தை நாடுகிறாய் போலும் (என்று எனக்குத் தெரிகிறது) நிச்சயமாக அல்லாஹ் மீது ஆணையாக 4 மாதம் 10 நாட்கள் முடியும்வரை நீ திருமணம் செய்ய முடியாது எனக் கூறினார். 'சபீஆ (ரழி)யவர்கள் கூறுகிறார்கள், 'அபூ சனாபில் எனக்கு அவ்வாறு கூறியபோது, மாலையில் என் ஆடையை அணிந்து கொண்டு நபியிடம் வந்து இவ்விடத்தைப்பற்றிக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நான் எனது குழந்தையை பெற்ற போதே (இத்தாவிலிருந்து) நீங்கிவிட்டேன் எனத் தீர்ப்பளித்து தான் விரும்பினால் திருமணம் செய்யுமாறு ஏவினார்கள்' (நூல் - முஸ்லிம்)

கணவனை இழந்த ஒரு பெண் எவ்வாறு இத்தா இருப்பாள் என்பதை இவ்வாக்கம் தெளிவுபடுத்தியிருக்கும் என நம்புகிறேன். இன்ஸா அல்லாஹ் அடுத்ததாக தலாக் சொல்லப்பட்ட பெண்ணின் இத்தா ட்டத்தினைப் பற்றி அலசுவோம்.


உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்...