உஸ்தாத் அன்சார் தப்லீகி அவர்கள் ஹதீஸில் பொய் உரைத்தார்களா? பாகம் - 01 மௌலவியா பர்வின் ஷரஈயா 

உஸ்தாத் அன்சார் தப்லீகி அவர்கள் ஹதீஸில் பொய் உரைத்தார்களா? உஸ்தாத் ரயீஸ்தீன் ஷரயீயின் ஹதீஸ் விமர்சனமும் அதற்கான பதிலும். 

எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவன் புறத்திலிருந்து சாந்தியும் சமாதானமும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மீதும் அவர்களை நல்ல முறையில் பின்பற்றி வாழ்ந்த சஹாபாக்கள், தாபியீன்கள், தபஉத்தாபிஈன்கள், காலத்துக்குக் காலம் ‘அறிவு’ எனும் பொக்கிஷத்தை அமானிதமாகக் காத்துத்தந்த இமாம்கள், நல்லோர்கள், நம் எல்லோர் மீதும் உண்டாகட்டுமாக!

“ஹதீஸின் பெயரால் நம்மவர்களின் பொய்கள்; பதில் தருவார்களா?” என்ற தலைப்பில் உஸ்தாத் ரயீசுத்தீன் ஷரஈ (ஹதாஹுல்லாஹ்) அவர்கள் ஆற்றிய உரையை நான் அண்மையில் செவிமடுத்தேன். அதில் அவர் எமது ஆசான் உஸ்தாத் அஷ்ஷெய்க் அன்சார் தப்லீகி (ஹபிளஹுல்லாஹ்) அவர்கள் ஹதீஸ்களில் அப்பட்டமாக பொய் கூறுவதாகவும் நபிகளாரின் பெயரால் பொய் உரைப்பது பெரும் பாவம் என்பதால் இவ்வாறான ஒரு தலைப்பை பேச வேண்டிய தேவை அவருக்கு ஏற்பட்டதாகவும் கூறியிருந்தார். 

மேலும் உஸ்தாத் அன்சார் தப்லீகி அவர்களை ‘பொய்யர்’ என நிரூபிப்பதற்காக அவர் முந்தைய காலங்களில் ஆற்றிய உரைகளிலே சொல்லப்பட்ட ஒரு ஹதீஸை மேற்கோள் காட்டி , அந்த ஹதீஸில் இல்லாததையெல்லாம் அஷ்ஷேய்க் அன்சார் தப்லீகி அவர்கள் இட்டுக்கட்டி கூறியதாகவும், முன் சென்ற அறிஞர்களே குழம்பிக்கொண்டிருந்த அந்த ஹதீஸிற்கு எந்த ஒரு தேடலும் வாசிப்பும் இல்லாமல் அவர் தன்னிலை விளக்கம் அளித்திருந்ததாகவும் கூறியிருந்தார்.

ஒருநாள் ஆசானாக இருந்தாலும் அவர் கண்ணியத்தை பேண வேண்டும் என்ற அறிவடக்கத்தை நல்லறிஞர்கள் வழியில் தனது சொல்லாலும் செயலாலும் எமக்கு போதித்த, அல்லாஹ்வின் விடயத்தில் பழிப்பவரின் பழிப்பை பொருட்படுத்தாமல் தான் கற்றுக்கொண்ட அறிவை வீரியமாக நடைமுறையில் கொண்டு வந்த உஸ்தாத் அன்சார் தப்லீகி அவர்களிடம் நாம் கல்வி பயின்றிருக்கின்றோம். அந்த அடிப்படையில் சில நாட்களாக இருந்தாலும் எமக்கு பாடம் சொல்லித்தந்தவராக உஸ்தாத் ரயீசுத்தீன் ஷரஈ அவர்கள்(ஹதாஹுல்லாஹ்) இருப்பதால் அவர் அண்மைக்காலமாக ஆற்றி வரும் உரைகளில் வீணான அபத்தங்களும் அநாகரிகங்களும் மலிந்து கிடந்தாலும் அவர் வழியில் நாம் செல்லக் கூடாது என்பதற்காக அவை எல்லாவற்றையும் புறந்தள்ளிவிட்டு ; “உஸ்தாத் அன்சார் தப்லீகி அவர்கள் ஹதீஸில் பொய்யுரைத்தர்கள்” என்று அவர் கூறும் அவதூறுக்கு அவர் சான்றாக எடுத்துக்கொண்ட குறிக்கப்பட்ட ஹதீஸ் தொடர்பான பல வாதங்களுக்கு பொது மக்களின் நலன் கருதி பதில் தரலாம் என நினைக்கின்றேன்.

*குறிக்கப்பட்ட ஹதீஸும் அஷ்ஷேய்க் அன்சார் தப்லீகி அவர்கள் சொன்னதும் *

நபி (ஸல்) அவர்கள் மதீனாவிலிருந்து மக்காவிற்கு ஹஜ்ஜிற்காக வெளியிறங்கி வந்த நிகழ்வை குறிப்பிடும் போது இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்:

51)- [1545] حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ ، حَدَّثَنَا فُضَيْلُ بْنُ سُلَيْمَانَ ، قَالَ : حَدَّثَنِي مُوسَى بْنُ عُقْبَةَ ، قَالَ : أَخْبَرَنِي كُرَيْبٌ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ : " انْطَلَقَ النَّبِيُّ مِنْ الْمَدِينَةِ بَعْدَ مَا تَرَجَّلَ وَادَّهَنَ، وَلَبِسَ إِزَارَهُ، وَرِدَاءَهُ هُوَ، وَأَصْحَابُهُ، فَلَمْ يَنْهَ عَنْ شَيْءٍ مِنَ الْأَرْدِيَةِ، وَالْأُزُرِ تُلْبَسُ إِلَّا الْمُزَعْفَرَةَ الَّتِي تَرْدَعُ عَلَى الْجِلْدِ، فَأَصْبَحَ بِذِي الْحُلَيْفَةِ رَكِبَ رَاحِلَتَهُ حَتَّى اسْتَوَى عَلَى الْبَيْدَاءِ أَهَلَّ هُوَ وَأَصْحَابُهُ، وَقَلَّدَ بَدَنَتَهُ وَذَلِكَ لِخَمْسٍ بَقِينَ مِنْ ذِي الْقَعْدَةِ ، فَقَدِمَ مَكَّةَ لِأَرْبَعِ لَيَالٍ خَلَوْنَ مِنْ ذِي الْحَجَّةِ،

அது துல்கஹ்தாவை (முடிப்பதற்கு) ஐந்து நாள் (இருக்கும் போது) ஆகும். துல்ஹஜ் மாதம் (தொடங்கி) நான்கு இரவுகள் சென்றதன் பின் மக்காவிற்கு வந்தடைந்தார்கள்.... (ஹதீஸின் சுருக்கம் – புஹாரி 1545)

இன்னும் இந்த ஹதீஸ் ஆயிஷா(ரழி), ஜாபிர் (ரழி) போன்ற சஹாபாக்கள் வாயிலாகவும் புஹாரி மற்றும் இன்னும் சில கிரந்தங்களில் பதிவாகியுள்ளது.

ஆயிஷா(ரழி) வாயிலாக வரும் சில அறிவிப்புகளில் இந்த ஹதீஸ் “நா ங்கள் துல்ஹஜ்ஜின் பிறையை அண்மித்தவர்களாக இருக்கும் நிலையில் நபி(ஸல்) அவர்களுடன் வெளியிறங்கினோம்” (புஹாரி 1786) என்ற வார்த்தைப்பிரயோகத்துடன் பதிவாகியுள்ளது.

உண்மையில் இந்த ஹதீஸை பார்க்கும் ஒருவர் எவ்வாறு விளங்கிக்கொள்வார்? சற்று உற்று நோக்குங்கள்! அதாவது , மதீனாவில் துல்கஃதா மாதத்தை துவங்கிய இறைத்தூதரும் தோழர்களும் அம்மாதம் முடிவதற்கு ஐந்து தினம் இருக்கும் போது ஹஜ்ஜிற்காக மக்காவை நோக்கி பிரயாணிக்கிறார்கள். ஆனால் அவர்கள் மக்காவை வந்தடைந்தது துல்ஹஜ் மாதம் துவங்கி நான்கு நாட்களின் பின்னராகும். எனவே,துல்ஹஜ்ஜின் துவக்கப்பிறை இறைதூதர்களையும் தோழர்களையும் பிரயாணத்தின் இடையில் தான் அடைந்திருக்கிறது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

*அஷ்ஷேய்க் அன்சார் தப்லீகி சொன்னது என்ன?*

இதே கருத்தை தான் உஸ்தாத் அன்சார் தப்லீகி அவர்கள் குறிக்கப்பட்ட அவர்களுடைய உரையில் ஆணித்தரமாக விளக்கி விட்டு பின்னர் “இது புஹாரியில் வரும் தெளிவான ஹதீஸ்” என கூறுகிறார்கள்.

அதாவது “துல்ஹஜ் மாதம் தொடங்குகின்றது பிரயாணத்தின் இடைநடுவில்; மதீனாவில் கண்ட பிறையை வைத்து அந்த மாதத்தின் இடையில் வெளியிறங்கியவர்கள் இடையில் கண்ட பிறையை வைத்து மக்காவிலே அதை அமுல்படுத்துகிறார்கள்.

இதுவே உஸ்தாத் அன்சார் தப்லீகி சொன்ன விடயமாகும். பிரயாணத்தில் இருந்தவர்களின் பிறை நிலைப்பாடு பற்றி சிந்திக்கும் போது இந்த ஹதீஸிலிருந்து எடுக்கப்படும் விளக்கம் இவ்வாறு தான் அமைய வேண்டும்.

*உஸ்தாத் அன்சார் தப்லீகி அவர்கள் மட்டும் தான் இவ்விளக்கத்தை சொன்னர்களா?*

பொதுவாக ஹதீஸ் நூற்களுக்கு விரிவுரை செய்த நல்லறிஞர்கள் ஹதீஸின் ஒவ்வொரு வார்த்தையையும் சொல்லும் போது அந்த வார்த்தையை அடைப்புக்குறிக்குள் இட்டு அதன் நாட்டத்தையும் சேர்த்து சொல்வார்கள்.

அந்த வகையில் ஸஹீஹுல் புஹாரிக்கு விரிவுரை செய்த ஹாபிள் இமாம் இப்னு ஹஜர்(ரஹ்) அவர்களும் இமாம் இப்னு பத்தால், இமாம் அய்னி போன்றோரும் கூறுவதைப் பாருங்கள்!

شرح صحيح البخارى لابن بطال (4/ 443)

(خرجنا مع رسول الله (صلى الله عليه وسلم) لخمس بقين من ذى القعدة) والخمس قريب من آخر الشهر، فوافاهم الهلال فى الطريق

_ஐந்து (நாள்) என்பது மாதத்தின் இறுதி பகுதிக்கு நெருக்கமாக உள்ளது. எனவே வீதியில் பிறை அவர்களை அடைகிறது. ‪#‎இப்னு‬ பத்தால் (ரஹ்) .., ( சஹீஹுல் புகாரியின் விரிவுரை: 4/443)

عمدة القاري شرح صحيح البخاري (10/ 123)

(خرجنَا لخمس بَقينَ من ذِي الْقعدَة) وَالْخمس قريبَة من آخر الشَّهْر فوافاهم الْهلَال وهم فِي الطَّرِيق لأَنهم دخلُوا مَكَّة فِي الرَّابِع من ذِي الْحجَّة.

ஐந்து (நாள்) என்பது மாதத்தின் கடைசிக்கு நெருக்கமாக உள்ளது. எனவே, வீதியில் அவர்கள் இருந்த நிலையில் பிறை அவர்களை அடைந்தது . ஏனென்றால், துல்ஹஜ் நன்காம் நாள் மக்காவில் அவர்கள் நுழைந்தார்கள். ‪#‎இமாம்‬ அய்னி(ரஹ்) , (உம்ததுல் காரீ: 10/123 ) 

எந்த பத்ஹுல் பாரி’யை சான்றாக எடுத்து அந்த பத்ஹுல் பாரியை வாசித்திருந்தாலாவது உஸ்தாத் அன்சார் தப்லீகி அவர்கள் தனது கருத்தை கூறியிருக்கவே முடியாது என்று டாக்டர் ரயீசுத்தீன் ஷரஈ அவர்கள் சொன்னார்களோ அந்த பத்ஹுல் பாரி’இல் ஹாபிள் இப்னு ஹஜர்(ரஹ்) கூறுவதைப் பாருங்கள்!

فتح الباري لابن حجر (3/ 609)

لخمس بقين من ذي القعدة والخمس قريبة من آخر الشهر فوافاهم الهلال وهم في الطريق لأنهم دخلوا مكة في الرابع من ذي الحجة

ஐந்து (நாள்) என்பது மாதத்தின் கடைசிக்கு நெருக்கமாக இருக்கிறது. எனவே வீதியில் அவர்கள் இருக்கும் நிலையில் பிறை அவர்களை அடைந்தது. ஏனெனில், அவர்கள் துல்ஹஜ் நன்காம் நாளில் மக்காவிற்குள் நுழைந்தார்கள். பாகம் :3 , பக்கம் : 609

ஆக இரண்டாம் கருத்திற்கு இடமின்றி “இறைத்தூதரும் தோழர்களும் இடை நடுவில் பிறை காண்கிறார்கள்” என்பது தான் இந்த ஹதீஸின் நாட்டம் என விரிவுரையாளர்கள் கூறுகிறார்கள்.

ஹதீஸின் நேரடி விளக்கத்தை புரியாமல் தனது உஸ்தாத் ஹதீஸில் ‘பொய் கூறுகிறார் ’ என உஸ்தாத் டாக்டர் ரயீசுத்தீன் ஷரஈ அவர்கள். சொல்கின்றார் . எதை கூறுவதற்காக சில கிரந்தங்களை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டாரோ அந்த கிரந்த ஆசிரியர்கள் அவரின் கூற்றுக்கு மாற்றமாக கூறியிருக்க; அவர்கள் யாருமே இதைப்பேசவில்லை என்று கூறும் டாக்டர் அவர்களின் கண்களுக்கு இந்த இமாம்களின் கூற்றுகள் எவ்வாறு மறைந்து போனது?

* “நபி (ஸல்) அவர்கள் இடைநடுவே பிறை கண்டார்கள்” என்பது இட்டுக்கட்டப்பட்ட பொய்யா?*

“பாதை நடுவே இறை தூதரும் தோழர்களும் பிறை கண்டார்கள்” என்பது இட்டுக்கட்டப்பட்ட பொய் என்றும், இவ்வாறான ஒரு கருத்தை உஸ்தாத் அன்சார் தப்லீகி அவர்களுக்கு முன் யாருமே கூறவில்லை என்றும், இந்த ஹதீஸை விளங்க முன் சென்ற எந்த அறிஞர்களின் கிரந்தத்தையும் உஸ்தாத் அன்சார் தப்லீகி அவர்கள் வாசிக்கவில்லை என்றும் உஸ்தாத் ரயீசுத்தீன் ஷரஈ அவர்கள் கூறிகிறார்கள். 

ஆனால் இவரின் கூற்று மிகவும் தவறானது. “இறைதூதர் பாதையில் தான் பிறை கண்டார்கள்” என்று இந்த ஹதீஸை வைத்து கூறுவது பொய் அல்ல. மாறாக அதன் நேரடி விளக்கம் அதையே குறிக்கிறது. மேலும், ஹாபிள் இப்னு ஹஜர்(ரஹ்) உட்பட ஏனைய விரிவுரையாளர்களும் இதே கருத்தைத்தான் கூறுகிறார்கள் என்பதை தெளிவாக நீங்கள் முன் சொல்லப்பட்டதிலிருந்து புரிந்திருப்பீர்கள்!

உஸ்தாத் ரயீசுத்தீன் ஷரஈ அவர்களே !! உங்களுக்கு கற்றுத் தந்த ஆசிரியரே எங்களுக்கும் கற்றுத் தந்தார் .. அவர் ஒரு விடயத்தை தெளிவு படுத்தும் போது அது சம்பந்தமாக பேசும் இமாம்களின் கிரந்தங்களை எந்தளவு வாசிக்க கட்டளை இடுவார் என உங்களுக்கு நான் சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லை ..

*இந்த நல்லறிஞர்கள் பொய்யர்களா?*

உஸ்தாத் அன்சார் தப்லீகி அவர்கள் அப்பட்டமாக பொய் கூறுகிறார் எனக்கூறிய டாக்டர் ரயீசுதீன் ஷரஈ அவர்கள் இந்த இமாம்கள் எல்லாம் பொய்யர்கள் எனக்கூறுவதற்கு முன் வருவாரா?

அல்லது இரண்டாம் கருத்திற்கு இடமின்றி அறிஞர்கள் எவ்வாறு இந்த ஹதீஸின் நேரடி விளக்கத்தை கூறுகிறார்களோ அவ்வாறே உஸ்தாதும் கூறியிருக்கிறார் என்று உண்மையை ஒப்புக்கொள்வாரா? 

உங்களுக்கு ஹதீஸின் நேரடி விளக்கம் புலப்படாமல் இருந்திருந்தால் ஆகக் குறைந்தது உஸ்தாத் தவறாக விளங்கியிருக்கின்றார் என்றாவது கூறியிருக்க வேண்டும் ..ஆனால் உங்கள் உஸ்தாதை பொய்யாக்கியது மற்றும் அன்றி இமாம்களின் கூற்றுகளை எல்லாம் மறைத்தல்லவா கருத்து சொல்லிவிட்டீ ர்கள் ???

உண்மையில் நான் உங்கள் உரையை செவிமடுக்கும் போதே நீங்கள் உஸ்தாத் அன்சார் தப்லீகி கூறும் நேரடி விளக்கத்தை பொய் கூறுவது போல் சித்தரித்து காட்டுகிறீர்கள் என்பதை புரிந்து கொண்டேன் .. உடனே நான் அவரைத் தொடர்பு கொண்டு “ நான் இதற்கு மறுப்பு எழுதப்போகிறேன் .. ஏனெனில் , இந்த ஹதீஸ் பற்றிய விடயத்தில் அவர் கூறும் அவதூறுக்கு கட்டாயம் மக்களின் நலன் கருதி பதில் கூறியே ஆக வேண்டும் என்று சொல்லிய போது அதற்கு உஸ்தாத் அன்சார் தப்லீகீ அவர்கள் “ரயீஸ்டீன் இடுவாம்பிற்க்காக பேசுகிறார் அவரை பெரிது படுத்தி பதில் அளிக்க தேவை இல்லை மகள் “ என்றுதான் கூறினார். என்றாலும் பொது மக்கள் உங்கள் பிழையான உரையால் பாதிப்படைய கூடாது என்பதாற்காகவே எழுத முடிவெடுத்து இது பற்றி மேலும் தேட துவங்கினேன் ..

ஆனால் , சொல்லப்பட்ட கிரந்தங்களை வாசிக்கும் முன் தெளிவாக வந்த இந்த இமாம்களின் கூற்றுகளை எல்லாம் மறைத்து விட்டு நீங்கள் உங்களது கருத்தை சொல்வீர்கள் என நான் சற்று கூட எதிர் பார்க்கவில்லை ..

*உஸ்தாத் அன்சார் தப்லீகி தவறிற்கு அப்பாற்பட்டவரா?*

இன்று மூத்த உலமாக்கள் என்று வர்ணிக்கப்படுபவர்களோ அவர்கள் அல்லாத இன்னும் பல தாயீக்களோ அவர்களின் உரைகளை நாம் அவதானிக்கும் போது அவர்கள் ஒரு ஹதீஸை அல்லது சம்பவத்தை சொல்லும் போது ஒவ்வொருவரின் வார்த்தையும் அவரவரின் போங்கிற்கு ஏற்றாற்போல் அமைந்திருக்கும்.

இந்த தாஈக்கள் ஒரு ஹதீஸை சொல்லும் போது மக்களுக்கு எளிதில் புரிய வேண்டும் என்பதற்காக அதன் நேரடி விளக்கத்தை ஹதீஸோடு சேர்த்தே கூறுவார்கள். இது அரபு மொழி பேசும் தாஈக்களின் உரைகளில் ஓரளவு இருந்தாலும் தமிழ் பேசுபவர்களின் உரைகளில் மலிந்து காணப்படுகிறது. ஏனெனில் இரத்தினச்சுருக்கமான ஹதீஸ்களின் வார்த்தைகளை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஆகும்.

ஹதீஸோடு சொந்த வார்த்தையை சேர்ப்பது அனுமதி என்று நான் இங்கே கூற வரவில்லை. மாறாக ஒவ்வொருவரும் ஹதீஸின் விளக்கத்தை ஒப்புவிக்கும் விதம் பற்றி பேசுகின்றேன். என்றாலும் தாஈக்கள் ஒரு ஹதீஸை சொல்லும் போது இந்த விடயத்தில் கவனம் கொண்டு ஹதீசையும் அதன் விளக்கத்தையும் பிரித்து பிரித்தே சொல்லுவதே பொருத்தமானதாகும் ..

.

இந்த வகையில் பார்த்தோமானால் உஸ்தாத் அன்சார் தப்லீகி அவர்களின் உரைகளில் இவ்வாறான நடைமுறையை மிகக்குறைந்த அளவில் தான் காணமுடியும். பொதுவாக இறைதூதர்(ஸல் ) கூறியதாக உஸ்தாத் அன்சார் தப்லீகி அவர்கள் ஒரு விடயத்தை அரபியில் சொல்லும் போது அதை வார்த்தைக்கு வார்த்தை நுணுக்கமாக மொழிபெயர்த்து விட்டு பின்னர் அதை தெளிவுபடுத்துவார். ஆனால் இந்த இடத்தில் ஹதீஸை அரபியில் சொல்லவும் இல்லை .. மொழிபெயர்த்து அந்த மொழி பெயர்ப்பில் வாய்மை தவறவும் இல்லை ... மாறாக ஹதீஸை சொல்லும் போது அதன் நேரடி விளக்கத்தையும் சேர்த்து சொல்கிறார் ...

சாதாரணமாக இவ்வாறான வார்த்தை போங்கை அவதானிக்கின்றவர்கள் எளிதில் இதை புரிந்து கொள்வார்கள். இதை நீங்களும் புரிந்துதான் இருந்திருப்பீர்கள் என்றே நினைக்கின்றேன் .

ஆனால், ஹதீஸ்கலை கற்றறிந்த உஸ்தாத் டாக்டர் ரயீசுத்தீன் ஷரஈ அவர்களுக்கு ஹதீஸை தெளிவுபடுத்தும் ஒருவரின் வார்த்தை போங்கு(ஸியாகுல் கலாம்) தெரியாதா? என்ற கேள்வி ஒரு புறம் இருக்க “ஹதீஸில் அப்பட்டமான பொய் சொல்கின்றார்” என நாவு கூசாமல் அவர் மீது அவதூறு சொல்லும் டாக்டர் அவர்களின் பேச்சு எம்மை மென்மேலும் வியப்பில் ஆழ்த்துகிறது.

உண்மையில் நடுநிலை போங்கு உள்ளவராக நபிகளாரின் ஹதீஸ்களை பாதுகாப்பதற்காகத்தான் தஃ’வாவில் களமிறங்கியவராக டாக்டர் இருந்தால் அவர் என்ன கூறியிருக்க வேண்டும் தெரியுமா?

“ தாஈகள் எல்லோரும் பேசுவது போன்று “உஸ்தாதும் அவருடைய பேச்சில் தவறிழைத்து விட்டார். ஹதீஸை முழுமையாக வாசித்து காட்டி விட்டு பின்னர் அந்த ஹதீஸின் விளக்கத்தை அவர் கூறியிருக்கலாம்.”

நபிமொழியை பாதுகாப்பதில் உண்மைத்தன்மை உள்ளவராக டாக்டர் ரயீசுதீன் ஷரஈ இருந்தால் இந்த அமைப்பில் தான் அவரது விமர்சனம் இருந்திருக்க வேண்டும். ஏனெனில் பேசும் போது தவறுகள் ஏற்படுவது என்பது ஆலிம்களாக இருந்தாலும் மனிதர்களுக்கு நிகழும் ஒன்றே, அதில் உஸ்தாத் அன்சார் தப்லீகி அவர்கள் மட்டும் விதிவிலக்கானவர் அல்ல.

ஆனால், உஸ்தாத் அன்சார் தப்லீகீ தவிர்ந்த ஹதீஸ்களை மிக மோசமாகக் கையாளும் மற்ற எந்த தாஈக்கள் விடயத்திலும் வாய் திறக்காமல் இருந்து கொண்டு உஸ்தாத் அவர்கள் ஹதீஸிற்கு கூறிய நேரடி விளக்கத்தை எடுத்துக்காட்டி , அவர் ஹதீஸில் இல்லாததை கூறுவது போன்ற பிரம்மையை ஏற்படுத்தி, அவர் ஹதீஸில் பொய் கூறுவது போன்று சித்தரித்துக்காட்டும் டாக்டர் ரயீசுத்தீன் ஷரஈ அவர்களின் நோக்கம் என்ன? அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்!

உஸ்தாத் அன்சார் தப்லீகி அவர்கள் ஹதீஸில் பொய்யுரைத்தார்கள் என்று உஸ்தாத் டாக்டர் ரயீசுத்தீன் ஷரஈ அவர்கள் கூறும் அவதூறு மிக மிக அபத்தமானது என்பதற்கு இந்த விளக்கம் மாத்திரம் போதுமானதாகும். மேலதிக விளக்கம் தேவைப் படாது என நினைக்கிறேன் ..

என்றாலும் தனது உஸ்தாதை “பொய்யர்” என்று கூறுவதற்காக அவரது பேச்சோடு சம்பந்தமில்லாத இந்த ஹதீஸ் தொடர்பான சில சிக்கல்களை டாக்டர் அவர்கள் முன்வைகிறார்கள்.

உண்மையில் உஸ்தாத் அவர்கள் ஹதீஸை வைத்து சொன்ன நேரடி விளக்கத்திற்கும் டாக்டர் அவர்கள் ஹதீஸ் தொடர்பாக முன் வைக்கும் சில சிக்கல்களுக்கும் எவ்வித நேரடி தொடர்பும் இல்லாவிடினும் அவர் அதனோடு சேர்த்து இதை முடிச்சிடுவதால் அது பற்றி சற்று அலசுவோம் ..

*ஒன்பது நாட்கள் எட்டு நட்களாக மாறுகிறதா?*

துல்கஃதா மாதம் முடிவதற்கு ஐந்து நாட்களுக்கு முன் மதீனாவிலிருந்து இறைதூதரும் தோழர்களும் வெளியிறங்கி துல்ஹஜ் மாதம் நன்காம் நாள் மக்கா சென்றடைகிறார்கள் என்பதே இந்த ஹதீஸில் சஹாபாக்கள் கூறும் விடயமாகும். 

ஆக அவர்களின் பிரயாண நாட்கள் ஒன்பது ஆகும்.

அதே போன்று நபி (ஸல்) அவர்கள் (பிறை ஒன்பதில்) அறபாவிலே தரித்த நாள் வெள்ளிகிழமை என ஸஹீஹான ஹதீஸ்களில் இடம்பெற்றுள்ளது. இதை வைத்து பார்க்கும் போது, பிறை ஒன்பது வெள்ளிகிழமையாக இருப்பதால் துல்ஹஜ் பிறை ஒன்று சந்தேகமே இல்லாமல் முன் சென்ற வாரத்திலுள்ள வியாழக்கிழமையாக இருக்க வேண்டும். அதாவது புதன் மாலை பிறையை கண்டு வியாழன் அவர்கள் துல்ஹஜ்ஜின் முதல் நாளை ஆரம்பித்திருக்க வேண்டும்.

அவ்வாறெனில், மாதம் துவங்குவதற்கு ஐந்து இரவுகளுக்கு முன் நபி(ஸல்) அவர்கள் மதீனாவில் இருந்து வெளியிறங்குகிறார்கள். அந்த வெளியிறங்கிய நாள் என்ன என்பதில் தான் அறிஞர்கள் சர்ச்சைப்பட்டு பல கருத்துக்களை கூறுகிறார்கள். 

ஏனெனில், துல்ஹஜ் பிறை ஓன்று வியாழக் கிழமை என்பதால் மதீனாவில் இருந்து அவர்கள் வெளியிறங்கிய நாளை கழித்துவிட்டு பார்க்கும் போது வெள்ளிகிழமை அவர்கள் வெளியிறங்குகிறார்கள் என்றே கணக்கின் படி சொல்ல வேண்டும். 

ஆனால் (வெளியிறங்கும் போது) மதீனாவில் நபி(ஸல்) அவர்கள் லுஹரை நான்கு ரக்அத்தாக தொழுவித்தார்கள் என ஸஹீஹான ஹதீஸில் இடம்பெற்றுள்ளது.

ஆக, வெள்ளிகிழமை அவர்கள் வெளியிறங்கியிருக்கமுடியாது. காரணம் இறைதூதர் ஜூம்மாவை விட்டு விட்டு நான்கு ரக்அத்கள் தொழுவதற்கு சாத்தியமில்லை.

இதனாலேயே; எந்த நாளில் அவர்கள் வெளியிறங்கினார்கள் என்பதில் சர்ச்சைப்பட்ட அறிஞர்களில் பெரும்பான்மையனோர் அது சனிக்கிழமையாகவே இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.

உண்மையில் வெளியிறங்கிய நாளையும் சேர்த்து கணக்கிட்டு பார்க்கும் போது சனிக்கும் வியாழனுக்கும் இடையில் ஐந்து இரவுகள் இருக்கின்றது என்பதில் சந்தேகமில்லை.

ஆக, சனிதான் அவர்கள் வெளியிறங்கினார்கள் என்ற பெரும்பான்மையான அறிஞர்களின் கூற்று “துல்கஃதா மாதத்தை முடிப்பதற்கு ஐந்து நாட்கள் இருக்கும் போது நாங்கள் வெளியிறங்கினோம்” என்ற சஹாபாக்களின் கூற்றுக்கு எவ்விதத்திலும் முரண்பட்டுவிடாது. 

இந்த கருத்தையே இமாம் இப்னுல் கய்யீம்(ரஹ்) அவர்கள் தனது ஸாதுல் மஆத் என்ற தனது நூலில் குறிப்பிட்டுக்கட்டுகிறார்.

زاد المعاد في هدي خير العباد (2/ 98)

وَوَجْهُ مَا اخْتَرْنَاهُ أَنَّ الْحَدِيثَ صَرِيحٌ فِي أَنَّهُ خَرَجَ لِخَمْسٍ بَقِينَ وَهِيَ يَوْمُ السَّبْتِ، وَالْأَحَدِ، وَالِاثْنَيْنِ، وَالثُّلَاثَاءِ، وَالْأَرْبِعَاءِ، فَهَذِهِ خَمْسٌ،

நாம் தேர்ந்தெடுத்த முறை யாதெனில்; ஹதீஸானது “(அவர்கள் துல்கஹ்தா முடிவதற்கு) ஐந்து நாட்கள் இருக்கும் போது வெளியிறங்கினார்கள்” என்று தெளிவாக வருகிறது. சனி, ஞாயிறு, திங்கள், செவ்வாய் புதன் .. இதுவே )அந்த( ஐந்து நாட்களாகும். (2/98)

ஆக, இப்னுல் கய்யிம்(ரஹ்) அவர்களின் கருத்துப்படி பார்த்தால், ஒன்பது நாட்கள் எட்டு நாட்களாக ஆகவுமில்லை. சனிக்கிழமை வெளியிறங்கினார்கள் என்பது “ஐந்து நாட்களுக்கு முன் நாங்கள் வெளியிறங்கினோம்” என்ற சஹாபாக்களின் கூற்றுக்கு எவ்விதத்திலும் முரண்படவுமில்லை” என்பதை குறித்துக்காட்டுகிறது.

நபி (ஸல் ) அவர்கள் எத்தனை நாட்கள் பிரயாணத்தில் தரித்திருந்தார்கள் என்ற இந்த சிக்கலுக்கு இந்த தீர்வையே நான் சரி காண்கிறேன் ..

*உஸ்தாத் டாக்டர் ரயீசுதீன் ஷரஈ(ஹதாஹுல்லாஹ்) சொன்னது என்ன?*

இந்த நாட்களின் எண்ணிக்கை விடயம் இவ்வாறு தெளிவாக இருக்கும் போது ஏன் உஸ்தாத் டாக்டர் ரயீசுதீன் ஷரஈ அவர்கள் இமாம் இப்னு கதீர்(ரஹ்) கூறியதாக இன்னொரு கருத்தை கூறி அதைத் தவிர வேறு எந்த வழியிலும் இந்த சிக்கலுக்கு தீர்வு காண முடியாது என கூற வேண்டும்?? என்ற நியாயமான கேள்வி உங்களுக்கு எழலாம்.

அதாவது, (வெளியிறங்கிய நாளை கழித்து விட்டு பார்க்கும் போது) )சனிக்கும் வியாழனுக்கும் இடையில் நான்கு இரவுகள் தான் உள்ளது. எனவே மொத்தம் அவர்கள் பிரயாணத்தில் தரித்த நாட்கள் எட்டு ஆகிவிடும். இதற்கு ஒரே தீர்வு: இறைதூதரும் மதீனவாசிகளும் துல்கஃ தா மாதத்தை முப்பதாக பூர்த்தி செய்து துல்ஹஜ் மூன்றாவது நாள் மக்கா வந்து சேர்ந்த போது மக்காவாசிகள் துல்கஃதா 29ஆம் நாள் பிறை கண்டுள்ளார்கள் என்பதால் துல்ஹஜ் நான்காம் நாளில் இருந்து கொண்டிருந்தார்கள். எனவே அரபிகளின் வழக்குப்படித்தான் சஹாபாக்கள் 5 இரவுகள் என்று சொன்னார்கள். அதனால் எஞ்சியிருப்பது 5 இரவுகள் தான் என்று நினைத்துத்தான் போனார்கள். இதனால் இவர்களுடைய ஒரு இரவு அடிபட்டு போகிறது. காரணம், மக்காவாசிகள் வியாழனின் இரவிலும் (புதன் மாலை) மதீனாவாசிகள் வெள்ளியின் இரவிலும் (வியாழன் மாலை) பிறையை கண்டுள்ளார்கள். எத்தனை நாட்கள் என்ற பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டுமெனில் இவ்வாறான ஒரு முடிவையே கூற வேண்டும்.” என்று ஆணித்தரமாககூறும் டாக்டர் அவர்கள் இதே கருத்தைதான் ஹாபிள் இப்னு கதீர்(ரஹ்) கூறுவதாக முன்வைக்கிறார்.

எனது பதில்; : ஆம், ஹாபிள் இப்னு கதீர்(ரஹ்) இந்த கருத்தை கூறுகிறார்கள் என்பது உண்மையே! உஸ்தாத் டாக்டர் ரயீசுத்தீன் ஷரஈ சொல்வது போன்று மட்டும் தானா இந்தப்பிரச்சினைக்குதீர்வு கொடுக்க முடியும் என்று கூறுவதற்குமுன் ஒரு விடயத்தை சொல்ல விரும்புகிறேன்.

அந்த மாதம் 29ஆக அல்லது 3௦ ஆக இருக்கட்டும். மதீனாவாசிகள் பிறையை முந்தி கண்டு மக்காவாசிகள் பின்னர் கண்டிருக்கட்டும் ; அல்லது மக்காவாசிகள் முந்தி கண்டு மதீனா வாசிகள் பிந்தி கண்டிருக்கட்டும். அல்லது இருவரும் ஒரே நாளில் கண்டவர்களாகவே இருக்கட்டும்..

இதில் எந்த விதமான கருத்து சொன்னாலும் நபி(ஸல்) அவர்கள் 29ஆவது பிறையை கண்டோ அல்லது 30 ஆக பூர்த்தி செய்தோ பாதையில் தான் துல்ஹஜ்ஜின் முதல் நாளை ஆரம்பித்தார்கள்; என்று இந்த ஹதீஸில் இருந்து கூறப்படும் நேரடி விளக்கத்தை யாரும் மறுக்க முடியாது. இதை அறிஞர்களின் கூற்றை வைத்து நான் ஆரம்பத்தில் தெளிவுபடுத்தி இருந்தேன். அது தவிர ,எத்தனை நாட்கள் நபி(ஸல்) பிரயாணம் செய்தார்கள் என்பது பற்றிய இந்த சர்ச்சைக்கும் நபி (ஸல்) அவர்கள் பாதையில் பிறை கண்டார்கள் என்ற ஹதீஸின் நேரடி விளக்கத்திற்கும் இடையில் ஹாபிள் இப்னு கதீர் (ரஹ்) உட்பட எந்த அறிஞரும் முடிச்சு போடவில்லை என்பதும் உங்களுக்கு புரிந்திருக்கும்.

*எந்த தீர்வு சரியானது ? **

ஹாபிள் இப்னு கதீர் (ரஹ்) அவர்கள் வெளியிறங்கும் நாளை விட்டு விட்டு கணக்கிடுவதால் வியாழனுக்கும் சனிக்கும் இடையில் நான்கு இரவுகள் இருக்கின்றது என்று கூறுகின்றார். இதனாலே மக்கா வாசிகள் வியாழன் இரவிலும் பிரயாணத்தில் இருந்த மதீனா வாசிகள் வெள்ளியின் இரவிலும் பிறை கண்டிருக்க வேண்டும் என்ற கருத்து அவர்களால் சொல்லப்படுகிறது.

உண்மையில் ; இவ்வாறு நிகழ்ந்து இருக்கலாம் என்று இடம்பாடாக கூற வேண்டிய கருத்தே இதுவாகும் . அதே போன்று தான் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண நான் ஏலவே சொல்லியிருந்த கருத்தை இமாம் இப்னு கையும் (ரஹ்) கூறுகிறார்கள். அதாவது வெளியிறங்கும் நாளையும் வைத்து கணக்கிட்டு பார்த்தால் சனிக்கும் வியாழனுக்கும் இடையில் 5 நாட்கள் இருக்கின்றது. இதுவே ஹதீஸில் சொல்லப்பட்ட அந்த 5 நாட்களாகும்.

கண்ணியமிக்கவர்களே! இரண்டு இமாம்களின் கருத்துக்களிற்கிடையிலும் சற்று ஒப்பு நோக்கி பாருங்கள்...

இமாம் இப்னு கதீர் (ரஹ்) அவர்களின் கூற்றை வைத்து டாக்டர் கூறும் அந்த தீர்வை விட இமாம் இப்னு கையீம் (ரஹ்) அவர்களின் கூற்று பிரயாணத்தில் தரித்த நாட்கள் பற்றிய இந்த பிரச்சினைக்கு ஒரு தெளிவான தீர்வாக இல்லையா?

அவருடைய உரையையும் எனது தரவையும் உங்கள் கண் முன்னே சற்று கொண்டு வாருங்கள்........  

பாகம் இரண்டை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும்