மாதர்களுக்கான மார்க்கத் தீர்வுகள் - விகாயா (ஷரயியா)

ஒரு பெண் ஆண்களுக்கு சலாம் சொல்வது இஸ்லாத்தில் அனுமதியா?

விடை:
இஸ்லாம் மனிதர்களுக்கு இடையில் பரஸ்பரத்தையும், ஒழுக்க நெறிகளையும் ஏற்படுத்தும் பல வழிமுறைகளைக் காட்டித்தந்துள்ளது. அதனுள் : இருவர் சந்திக்கும் போது அல்லது வீட்டிற்குள் செல்ல அனுமதி கோரும் போது 'சலாம்' சொல்வது முக்கியமான ஒரு அம்சமாகும்.

ஸலாத்தின் சிறப்புக்களையும் முக்கியத்துவத்தையும் பல சந்தர்ப்பங்களில் தெளிவுபடுத்திய நபி (ஸல்) அவர்கள் 'நடந்து செல்பவர், அமர்ந்திருப்பவருக்கு ஸலாம் கூற வேண்டும்' என்பதைப் போன்ற பல ஒழுங்கு முறைகளையும் கற்றுத்தந்துள்ளார்கள்.

எனினும் ஸலாத்தைப் பரப்பும் விடயத்தில் ஆண் பெண் என்ற எந்தவொரு வரையறைகளையும் குறிப்பிட்டதாக நாம் காணவில்லை. நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்:

'நீங்கள் விசுவாசங் கொள்ளும் வரை சுவனத்தில் நுழையமாட்டீர்கள். மேலும் ஒருவருக்கொருவர் அன்பு காட்டும் வரை விசுவாசம் கொள்ள மாட்டார்கள். நான் உங்களுக்கு ஒன்றை அறிவிக்கட்டுமா? அதை நீங்கள் செயற்படுத்தினால் ஒருவரையொருவர் நேசம் கொள்ளலாம். உங்களிடையே சலாத்தைப் பரப்புங்கள்.

இந்த நபி மொழி ஸஹீஹ் முஸ்லிம் கிரந்தத்தில் 54வது ஹதிஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நிகழ்ந்த பின்வரும் சம்பவம் ஒரு பெண் ஒரு ஆணுக்கு அவருடன் பேசுவதற்கு முன் சலாம் சொல்வது கூடும் என்பதை எடுத்துரைக்கிறது.

'உம்மு ஹானீ பின்த் அபூ தாலிப் (ரழி) அவர்கள் கூறியதாவது: (மக்கா வெற்றி ஆண்டில்) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் குளித்துக் கொண்டிருக்க அவர்களை அவர்களின் புதல்வி பாத்திமா (ரழி) அவர்கள் மறைத்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். அப்போது நான் சலாம் கூறினேன்...'

இச்சம்பவம் ஸஹீஹூல் புஹாரி என்ற கிரந்தத்தில் 6158வது ஹதீஸாக பதிவாகியுள்ளது. அதே போன்று தேவையேற்படும் போது ஒரு ஆண் பெண்ணுக்கு சலாம் கூறுவதில் எந்தவொரு தடைகளும் வரவில்லை.

அதனாலேயே உமர் (ரழி) யவர்கள் தம் மரணத்தருவாயில் ஆயிஷா (ரழி) அவர்களுக்கு சலாம் சொல்லி, பின் நபி (ஸல்) மற்றும் அபூபக்கர் அவர்களும் அடக்கம் செய்யப்பட்ட ஆயிஷா (ரழி) அவர்களின் அறையில் தானும் அடக்கம் செய்யப்படுவதற்கு அனுமதி கோரி அவரின் மகனை அனுப்பி வைத்தார்கள்.

இச் சம்பவம் ஸஹீஹூல் புஹாரியில் 3700 வது ஹதீஸாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இதே சம்பவத்தில் உமர் (ரழி)க்காக அனுமதி வேண்டச் சென்ற அவரின் மகனான அப்துல்லாஹ் (ரழி) அவர்களும் ஆயிஷா நாயகிக்கு சலாம் சொல்லி அனுமதி கேட்ட பிறகு உள்ளே நுழைந்தார் என்று கூறப்பட்டிருப்பதைக் காணமுடிகின்றது.

ஒரு பெண் அந்நிய ஆண்களுடன் பேசுவதிலும் பழகுவதிலும் எத்தனையோ ஒழுக்க விழுமியங்கைள இஸ்லாம் கற்றுத் தந்திருக்க இது அத்தனையிலும் பொடுபோக்காக இருக்கின்ற எம் பெண்கள், மிதமான பேணுதலை காரணங்காட்டி ஆண்களுடன் பேச வேண்டிய சந்தர்ப்பங்களிலும் ஆண்களின் மீது சலாம் சொல்வதை மாத்திரம் தவறாகக் கருதுவது மார்க்கத்தில் அவர்களின் அறியாமையை எடுத்துக் காட்டுகின்றது.

அத்துடன் ஆண்கள் : பெண்களுக்கு 'சலாம்' சொல்வதைத் தவறெனக் கருதி தவிர்ந்து கொள்வதால் அனுமதியற்ற பெண்களைச் சந்திக்கும் போதும், அவர்களின் வீட்டிற்குச் செல்லும் போதும் பல இன்னல்களும், சங்கடமான நிலைகளும் இரு தரப்பினருக்கும் நிகழ்வதை எங்களால் காண முடிகின்றது.

எனவே, இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்ட வரையறைகளை பேணி நடந்து, அனுமதிக்கப்பட்ட சலுகைகளை துஷ்பிரயோகம் செய்யாமல் எடுத்து நடப்போமாக..


உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்...