கல்யாண பெண் வீட்டு சாப்பாடு கூடுமா? கூடாதா? விளக்கம் தருக. - எம்.ஐ. அன்ஸார் தப்லீகி

இஸ்லாத்தைப் பொறுத்த வரை ஒரு திருமணத்தில் மாப்பிள்ளைக்கு உள்ள கட்டாயக் கடமை அவர் தன்னுடைய சக்திக்கு உட்பட்ட அளவிற்கு வலிமா சாப்பாடு என்ற ஒரு சாப்பாட்டைக் கொடுப்பது. றஸூல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அதை பற்றி கூறுகின்ற பொழுது அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப் றழியல்லாஹூ அன்ஹூ அவர்களுக்கு ஒரு ஆடு அறுத்தேனும் வலிமா சாப்பாடு கொடுங்கள் என்றார்கள் அதே நேரம் நபிகளார் எல்லோருக்கும் ஒரு ஆடு அறுத்து வலிமா கொடுக்கவில்லை. கொடுக்க சொல்லவும் இல்லை.

அவர் ஸபியா ரழியல்லாஹூ அன்ஹூ அவர்களை திருமணம் முடிக்கின்ற பொழுது தன்னிடத்திலும் ஸஹாபாக்களிடத்திலும் இருந்த உணவுப் பொருட்களை கொண்டு வரச்சொல்லி எல்லோருமாக அதை சாப்பிட்டார்கள், அது வொலிமாவாகவும் அமைந்தது. ஆனால் வொலிமா சாப்பாடு என்பது மாப்பிள்ளை தன் மீது உள்ள சுமையை, கடமையை செய்வது.
பெண்வீட்டு சாப்பாடு என்பது நமது சமுதாயத்திலே ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு இடத்தை பிடித்திருக்கிறது. நான் அறிந்த வரை பெரும்பாலும் பெண் தரப்பாரிடத்தில் சுமத்தப்பட்ட ஒரு சுமையாகத்தான் அது அமைந்திருக்கிறது.

ஒரு திருமணத்தில் ஐந்து சத செலவும் பெண் வீட்டாருக்கு கிடையாது. இஸ்லாம் காட்டிய திருமணத்தில், மஹர் செலவும் ஆணுக்குத்தான். சாப்பாட்டுச் செலவும் ஆணுக்குத்தான். நாம் பார்க்கிறோம் ஆயிரத்து ஒரு ரூபாய் மஹர் கொடுக்கிறார் மாப்பிள்ளை ஆனால் அந்த ஆயிரத்து ஒரு ரூபாய் மஹரில் திருமணம் நடக்கிறது அந்த பெண் வீட்டில் சாப்பாட்டுக்கு ஐம்பது ஆயிரம் தேவைப்படுகிறது.

இவர்கள் கேட்கிறார்கள் சில இடத்தில் எத்தனை ஸஹன் சாப்பாடு நீங்கள் கொடுப்பீர்கள் என்று..

அல்லது கேட்கா விட்டாலும் நாம் கொடுத்தாக வேண்டும் என்ற ஒரு கடமைப்பாட்டில் பல ஆயிரம் செலவு செய்து அந்த சாப்பாடு கொடுக்க வேண்டி வருகிறது.. அந்த சாப்பாடு கொடுக்க வில்லை என்றால் அவர்களை கேவலமாக நினைக்கிறார்கள்.

எனவே மார்க்கத்தில் இல்லாத ஒன்றை உருவாக்கி சமுதாயத்தில் அதைக் கொண்டு ஒரு பாரத்தை பெண் வீட்டார் மீது சுமத்தி அதை செய்யாதவர்கள் ஏளனமாக கருதப்படக் கூடிய அளவுக்கெல்லாம் இது இட்டுச் செல்கின்றது என்பதால் அந்த சாப்பாடு கொடுக்கவும் கூடாது, அதற்கு அழைத்தால் போகவும் கூடாது.

நாம் குர்ஆன் சுன்னாவை ஹயாத்தாக்குபவர்களே தவிர குர்ஆன் சுன்னாவுக்கு மாற்றமானதை ஹயாத்தாக்குபவர்கள் அல்ல. எனவே திருமணங்கள் நடக்கின்ற சந்தர்ப்பத்தில் மாப்பிள்ளை தனது கடமையை ஒழுங்காக செய்து குறிப்பாக வலிமா சாப்பாட்டை கூட அவர் தனது வீட்டில் போட்டுக் கொள்ளட்டும்.

ஏன் அவர் பெண் வீட்டில் போட்டார் என்றால் அன்றைக்கு பெண் வீட்டில் சில செலவுகள் ஏற்படும் அதனால் எது ஒரு பிழைக்கு வழிவகுக்குமோ அதுவும் பிழையே.. இது இஸ்லாத்தில் உள்ள ஒரு பொது விதி அதனால் இவைகளை நீங்கள் தவிர்ந்து கொள்ள வேண்டும்.

இப்படி நான் கூறும் இந்த விதிக்கு என்ன ஆதாரம் என்றால் நபியவர்கள் கஃபதுல்லாஹ்வை இப்றாஹிம் நபி நிர்மானித்த அதே அடித்தளத்தில் நிர்மானிக்க விரும்பினார்கள். அதாவது உங்களுக்குத் தெரியும் கஃபதுல்லாஹ் அது ஒரு பெட்டி வடிவில் இருக்கிறது, முன்னால் ஒரு அரை வட்டம் இருக்கிறது.

இப்றாஹிம் நபியவர்கள் கட்டிய கஃபதுல்லாஹ் அந்த அரை வட்டமும் சேர்த்ததுதான். ஆயிஸா (றழி) அவர்களிடத்தில் நபியவர்கள் மக்கா வெற்றிக்குப் பின் சொல்கிறார்கள் உன்னுடைய சமுதாயத்தினர் வரவு குறைந்து இருந்ததால் அதை இவ்வாறு கட்டி விட்டார்கள். ஆனால் நான் இப்றாஹிம் நபியினுடைய அதே அமைப்பில் கஃபாவை கட்ட விரும்புகின்றேன். என்றாலும் என்னுடைய சமூகம் இப்பொழுது தான் புதிதாக இஸ்லாத்திற்கு வந்து உள்ளார்கள் என்னுடைய இந்த செயலை கண்டு அவர்களுடைய உள்ளங்கள் வெறுத்து விடும். அதனால் நான் விரும்புகின்ற காரியத்தை நான் விட்டு விடுகின்றேன் என்று கூறினார்கள்.

நாம் செய்வது அனுமதியான காரியமாக இருந்தாலும் அது ஒரு பிழைக்கு வழி வகுக்கும் என்றிருந்தால் அந்த காரியத்தை செய்தல் கூடாது.. அதற்கு இஸ்லாமிய சட்டக்கலையில் 'பிழைகளுக்கு வழி வகுக்கும் காரணிகளையும் அடைத்து விடல்' என்று கூறுவார்கள்.

இன்றைக்கு பெண் வீட்டு சாப்பாடு ஒவ்வொரு ஊர்களிலும் அது ஒரு பாரிய இடத்தில் இருக்கிறது. அல்லாஹ்வின் உதவியால் வலிமா என்ற ஒன்று ஒரு காலத்தில் அறவே இல்லாமல் இருந்தது.. வலிமா சாப்பாடு வந்ததால் பெண் வீட்டாரின் சாப்பாடு குறைந்து குறைந்து வருகிறது. இன்ஸா அல்லாஹ் மொத்தமாக அதை இல்லாமல் ஆக்கி கொடுக்கின்ற மஹருக்கு ஒரு பெறுமதி வரும் அளவுக்கு நாங்கள் அந்த பெண்ணுக்கு கொடுத்த அந்த சொத்தை பெறுமதியானதாக்கி பெண் தரப்புக்கு எந்த சுமையும் இல்லாமல் ஆக்க வேண்டும் அதானால் இந்த காரியத்தை விட்டு விடுவோமாக....