பிள்ளைகளை தத்தெடுக்கும் விடயத்தில் இஸ்லாத்தின் நிலைப்பாடு - மௌலவியா விகாயா (ஷரயியா)

குழந்தைகளை தத்தெடுக்கும் விடயம் எம்மத்தியில் பரவலாக நடந்து வருகின்றது.
சிலர் தமக்கு குழந்தை பாக்கியம் இல்லையென்றும், இன்னும் சிலர் ஆண் புதல்வர்களை மாத்திரம் கொண்டிருப்பதால் பெண் குழந்தை தேவையென்றும், வேறு சிலர் ஆண் குழந்தை தேவையென்றும், ஏனையோர் அனாதைகளுக்கு கைகொடுக்கின்றோம் என்றும் பல காரணங்களைக் கருவாகக் கொண்டு பிள்ளைகளை தத்தெடுத்து அவர்களிடம் தங்களைப் பெற்றோரென அறிமுகம் செய்து வளர்ப்புப் பிள்ளைகளை சொந்தக் குழந்தைகளின் அந்தஸ்தில் வைத்துப் பார்ப்பதை காணமுடிகின்றது.

எனவே இது விடயமாக இஸ்லாம் என்ன கூறுகிறது? இதன் சாதக பாதகங்கள் யாவை? எனப் பார்ப்போமானால்,

இஸ்லாம் அறிமுகமாவதற்கு முன்னுள்ள காலத்தில் மக்களின் நிலைப்பாடு

இஸ்லாம் அறிமுகமாவதற்கு முன்னுள்ள காலத்தில் மக்கள் குழந்தைகளை தத்தெடுத்து அக்குழந்தைகளின் பெயரைத் தம் பெயருடன் இணைத்துக் கூறக் கூடியவர்களாகவும், அவர்களைச் சொந்தப் பிள்ளைகளாக எண்ணி அவர்களோடு அன்னியோன்ணியமாகப் பழகக் கூடியவர்களாகவும் இருந்து வந்தனர். இதன் பிரகாரம் இறைவனின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களும் ஸைத் (றழி) ஐ மகனாக வளர்த்து வந்தார்.

மேலும் மக்கள் அவரை முஹம்மதின் மகன் ஸைத் என்றே அழைத்தனர்.

இவ்வாறே அம்மக்கள் வளர்ப்புப் பிள்ளைகளிடம் ஒட்டியுறவாடினார்கள் என்பதற்கு பின்வரும் சம்பவம் சான்றாக அமைகிறது.

நபித்தோழர் அபூ ஹுதைபாவின் மனைவியான சஹ்லா பின்த் ஸுஹைல் (றழி) அவர்கள் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே நாங்கள் சாலிமை மகனாக அழைத்து வந்தோம்.

அல்லாஹ்வோ (உங்கள் வளர்ப்புப் பிள்ளைகளை அல்லாஹ் சொந்தப் பிள்ளையாக்கவில்லையென) குர்ஆன் வசனத்தின் மூலம் கட்டளையிட்டு விட்டான்.

இப்போது சாலிம் என்னிடம் வந்து போகின்றார். இதின் என் கணவர் அபூ ஹுதைபாவிற்கு விருப்பமில்லையென நான் உணர்கிறேன் எனக் கூறினார்.

இதுவே அம்மக்கள் இருந்த நிலையாகும்.

இஸ்லாத்தின் நிலைப்பாடு.

இவ்வாறு மக்கள் வளர்ப்புப் பிள்ளைகளைத் தம்பிள்ளைகளாக நடாத்தி வந்த வேளையில் தான் இறைவன் பின்வரும் திருக்குர்ஆன் வசனத்தை இறக்கி பழைய நடைமுறைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தான். அல்லாஹ் கூறுகின்றான்.

''அல்லாஹ் உங்களின் சுவீகாரப் பிள்ளைகளை உங்கள் (சொந்த) பிள்ளைகளாக்கிவிடவில்லை. இவையாவும் உங்கள் வாய்களால் சொல்லும் (வெறும்) வார்த்தைகளேயாகும். அல்லாஹ் உண்மையைக் கூறுகிறான். இன்னும் அவன் நேர் வழியையே காட்டுகிறான்''. (33ம் அத்தியாயம் 4ம் வசனம்)

எனவே இதற்கான யதார்த்தங்களும் நியாயங்கயும் என்னவென நோக்கினால் இங்கு அப்பிள்ளையின் உண்மையான பெற்றோர் மறைக்கப்பட்டு பொய்யானதொரு தகவலைக் கொண்டு அப்பிள்ளை ஏமாற்றப்படுகிறது.

மேலும் அப்பிள்ளையை நாம் வளர்க்கும் விடயம் அக்குழந்தைக்கு தெரியா விட்டாலும் சமுதாயம் அதை அறிந்திருக்கின்றது. என்றோ ஒருநாள் அப்பிள்ளைக்கு உண்மை தெரிய வரும் போது அப்பிள்ளை மனோரீதியாக பாரிய அளவில் பாதிக்கப்படும்.

இறைவன் ஒரு மனிதனுக்கு அடிப்படையில் வைத்து படைத்துள்ள உணர்வுகள் இங்கு மறைக்கப்பட்டு திருமணம் செய்ய அனுமதியானவர்களின் பட்டியலிலிருந்து அப்பிள்ளை வெளியேற்றப்படுகிறது. ஒரு பெண் தான் திருமணம் செய்ய அனுமதியற்றவர்களுடன் மாத்திரம் மேற்கொள்ள முடியுமான தனிமையிலிருத்தல், பயணித்தல் மற்றும் அலங்காரங்களை வெளிப்படுத்தல் போன்ற விடயங்களை அன்னியர்களுடன் மேற்கொள்வதை இறைவன் தடுத்திருக்கிறான்.

இந்த நிலையில் இவ்வளர்ப்புப்பிள்ளை ஓர் ஆண் பிள்ளையாகயிருந்தால் இஸ்லாத்தின் பார்வையில் இவன் ஒரு அன்னியனென்பதால் அப்பிள்ளையை வளர்க்கும் பெண் மற்றும் அவளின் பெண்குழந்தை ஆகியோரின் நிலமை என்ன? மாறாக அப்பிள்ளை ஒரு பெண்பிள்ளையாகவிருந்தால் வளர்க்கும் ஆண் (தந்தை) மற்றும் அவரின் புதல்வர்களும் இஸ்லாத்தின் பார்வையில் அன்னியர்கள் என்பதால் அவர்களின் முன் இப்பெண் குழந்தையின் நிலை என்ன எனச் சிந்திப்பது எம் கடமையாகும்.

அல்லாஹ் ஒரு ஆண் திருமணம் செய்ய அனுமதியற்றவர்களை பட்டியலிடும் போது உங்களின் முள்ளந்தண்டுகளிலிருந்து வந்த உங்கள் புதல்வர்களின் மனைவியரும் தடுக்கப்பட்டுள்ளனர் எனக் கூறி வளர்ப்பு மகனை சொந்த மகனின் பட்டியலில் இணைக்க முடியாதென்று தெளிவுபடுத்துகிறான்.

மாறாக நாம் அவர்களின் நிலைமையை மறைத்து சொந்தப் பிள்ளைகளின் பெயரில் அல்லாஹ் சொந்தப் பிள்ளைகளின் பெயரில் அல்லாஹ் சொந்தப் பிள்ளைகளுக்கு விதித்த பங்கைப் போன்று வழங்கினால் அங்கு பல சிக்கல் உருவாகும்.

இங்கு மாத்திரமின்றி எல்லாவிடயங்களிலும் சிக்கல்கள் உருவாகி மார்க்கம் சிதைக்கப்படும் நிலை உருவாகும்.

இஸ்லாம் காட்டும் வழிமுறை

நாம் ஒரு குழந்தையை வளர்ப்பதாயின் அக்குழந்தைக்கு அதன் பெற்றோர்கள் யாரென தெரியப்படுத்துவதும் அக்குழந்தையின் பெயருடன் சொந்தத் தந்தையின் பெயரை இணைத்துக் கூறவேண்டுமென்பதையும் பின்வரும் குர்ஆன் வசனம் தெளிவுபடுத்துகிறது.

'' நீங்கள் (எடுத்துவளர்த்த) அவர்களை அவர்களின் தந்தையின் பெயரைச் சொல்லி (இன்னாரின் பிள்ளையென) அழையுங்கள். அதுவே அல்லாஹ்விடம் மிக நீதமுள்ளதாகும். (அத்தியாயம் 33 வசனம் 5)

மாறாக நாம் அக்குழந்தையை அனாதை இல்லாத்திலிருந்தோ அல்லது பொது இடங்களில் கைவிடப்பட்டதாகவோ கிடைக்கப்பெற்று அப்பிள்ளையின் பெற்றோர் யாரெனத் தெரியாதெனின் அவர்கள் எம் சன்மார்க்க சகோதர்களாகவும் எம் நண்பர்களாகவும் இருக்கின்றனர் என முன்வந்த குர்ஆன் வசனத்தின் மற்றய பகுதி தெளிவு படுத்துகிறது. 

அல்லாஹ், மனிதனுக்குப் பலவிதமான உண்ர்வுகளை வைத்துப்படைத்த ரீதியில் ஒரு மனிதனுக்கு எவர்களின் மீது தப்பான எண்ணங்கள் வருமெனபதையும் அதைத் தடுக்கும் வழிமுறைகளையும் நன்கறிந்தவன்.

ஆகையால் தான் பால்குடிமுறையும் இரத்த உறவைப் போன்று தப்பான எண்ணங்களைத் தடுக்கும் என்பதை பின்வரும் வசனம் தெளிவு படுத்துகிறது. ''உங்களுக்கு பாலூட்டிய உங்கள் தாய்மார்களும் பால்குடி சகோதரிகளும் (திருமணம் செய்ய தடுக்கப்பட்டுள்ளனர்)'' (4ம் அத்தியாயம் 23ம் வசனம்)

எனவே ஒரு குழந்தை ஒரு பெண்ணிடமிருந்து தாய்ப்பாலருந்தியிருந்தால் அக்குழந்தைக்கும் அத்தாய்க்குமிடையில் மரியாதையான உணர்வும் தாய் அன்பும் உருவாகிறது.

எனவே நாம் வளர்க்கும் குழந்தை பெண்ணாகயிருந்தால் அவளிற்கு வளர்க்கும் பெண் (தாய்) பாலூட்டுவதன் மூலம் அக்குழந்தை வளர்க்கும் தந்தைக்கு பால்குடிமகளாகவும் அவர்களின் புதல்வர்களுக்கு பால்குடி சகோதரியாகவும் மாறுவாள்.

அத்தாய் பாலூட்டத் தகுந்த உடல் நிலையிலில்லையாயின் வளர்க்கும் தந்தையின் சகோதரி பாலூட்டுவதன் மூலம் அவரிற்கு தங்கை மகளாக மாறுவாள்.

மேலும் அது ஆண் குழந்தையாகவிருந்தால் அவனுக்கு வளர்க்கும் பெண் (தாய்) பாலூட்டுவதன் மூலம் அவன் அவனுக்கு பாலூட்டிய தாயெனவும் அவளின் பெண்குழந்தைகள் பால்குடி சகோதரிகளாகவும் ஆகுவார்கள்.

அதற்கு சாத்தியமில்லையென்றிருந்தால் வளர்க்கும் தாயின் சகோதரி பாலூட்டுவதன் மூலம் அத்தாய்க்கு சகோதரியின் பால்குடி மகனாக மாறூவான்.

அவ்வாறு பாலூட்ட வழியற்றவர்கள் பொறுமையை நிலைநாட்டுவதே பொருத்தமாகும்.

இறைவன் நாடியதையே வழங்குவான் என்பதை பின்வரும் குர்ஆன் வசனம் தெளிவுபடுத்துகிறது.

''அல்லாஹ்வுக்கே வானங்களினதும் பூமியினதும் ஆட்சி சொந்தமாகும். ஆகவே நான் விரும்பியவற்றைப் படைக்கிறான். தான் விரும்புவோருக்குப் பெண்மக்களை அளிக்கிறான். மற்றும் தான் விரும்புவோருக்கு ஆண் மக்களை அளிக்கிறான். அல்லது அவன் அவர்களுக்கு ஆண்மைக்களையும் பெண்மக்களையும் சேர்த்துக் கொடுக்கிறான். அன்றியும் தான் விரும்பியோரை மலடியாகவும் செய்கிறான். நிச்சயமாக அவன் மிகஅறிந்தவன் பேராற்றலுடையவன்'' (அத்தியாயம் 42 வசனம் 49,50)

எனவே இதுவரை காலமும் வளர்த்து வந்த பிள்ளைகளுக்கு யதார்த்தத்தைப் புரியவைத்து இறைவனுக்குப் பொருத்தமாக வாழ முன்வரவேண்டும் என்பதை பின்வரும் மறை வசனம் உணர்த்துகிறது. ''(முன்னர்) இது பற்றி நீங்கள் தவறு செய்திருந்தால் உங்கள் மீது குற்றமில்லை. ஆனால் உங்களின் இருதயங்கள் வேண்டுமென்று செய்வதே (குற்றமாகும்). அல்லாஹ் மிகவும் மன்னிப்பாளனாகவும் மிக்க கிருபையுடையவனாகவும் இருக்கிறான்''.

எனவே நாம் இறைவனை அஞ்சி அவனுக்குப் பொருத்தமாக வாழ்ந்து வெற்றியடைவோம்.

மேலும் சொத்தைப் பங்கிடும் முறையை இறைவன் கூறும் போது வளர்க்கும் பிள்ளைகளுக்கு சொத்தைப் பங்கிடுமாறு ஏவவில்லை. என்றாலும் நன்கொடையாக வழங்குவதில் குற்றமில்லை.