மாதர்களுக்கான மார்க்கத் தீர்வுகள் - பெண்கள் இமாமாக நின்று தொழுகை நடத்தலாமா? - விகாயா ஷரயிய்யா

வினா :
பெண்கள் பலர் ஒன்று கூடியுள்ள ஓர் நிகழ்வின் போது, தொழுகைக்கான நேரம் வந்து விட்டால் ஒருவர் எழுந்து இமாமாக நின்று தொழுகை நடத்தலாமா? அதாவது ஒரு பெண் தனது சகோதரிகளுக்கும் இமாமத் செய்வது அனுமதியான காரியமா?

பெண்களுக்கு பெண் இகாமத் செய்வது சுன்னத் அல்ல' என ஓர் வார்த்தையில் கூறுவது இங்கு பொருத்தமாகாது. எனவே இதனை சற்று விரிவாக பார்ப்போம். ஒருவர் தனித்து நின்று தொழுவதை விட (ஜமாஅத்தாக) கூட்டாக ஒன்று சேர்ந்து தொழுவது பன் மடங்கு நன்மையைப் பெற்றுக் கொடுக்கும் ஒரு செயலாகும். இதனால் நபியவர்கள் பல சந்தர்ப்பங்களில் ஆண்கள் மீது ஜமாஅத் தொழுகையினை வலியுறுத்திக் கூறியுள்ளதை நாம் அறிவோம்.

அதற்கமைய, நபி (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்த நயவஞ்சகர்கள் உட்பட அனைத்து நபித் தோழர்களும் 'ஜமாஅத்' தொழுகையில் கலந்து கொண்டார்கள். நபித் தோழியர்களும் கூட 'ஜமாஅத் தொழுகை'யின் பன்மடங்கு நன்மைகளை நாடிப் பள்ளிவாசலுக்கு சமூகமளித்ததாக ஹதீஸ்கள் சுட்டிக்காட்டுகின்றது.

இவ்வாறு, பன் மடங்கு நன்மைகளை ஈட்டித் தரும் ஜமாஅத் தொழுகைக்கு ஆண்களோடு, பெண்களும் பள்ளிவாசல் களுக்கு வந்து கலந்து கொள்ள அனுமதித்த இஸ்லாம் மார்க்கம், ஒரு பெண் இந்த ஜமாஅத் தொழுகையை தான் இமாமாக நின்று நடத்த அனுமதித்துள்ளதா? இல்லையா? என்ற வினா ஒன்று எழும்புகிறது.

இதற்கான பதிலை நாம் நபி (ஸல்) அவர்களின் தீர்வு, அங்கீகாரம் மற்றும் அவர்களின் காலத்து நடைமுறை ஆகியவற்றிலிருந்தே தேர்ந்தெடுக்க கடமைப் பட்டிருக்கின்றோம். அத்தோடு நபி(ஸல்) அவர்களின் நிலைப்பாட்டை அறிந்து கொள்வதே எம்மை சரியானதொரு முடிவின் பால் இட்டுச் செல்லும்.

பெண்கள் இமாமத் செய்யலாம் எனக் கூறுபவர்கள் குறிப்பிடும் முக்கியமானதொரு ஆதாரம் பின்வருமாறு.

உம்மு வரகா (றழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் தனது வீட்டில் அதான் சொல்லும் முஅத்தினை எடுத்துக் கொள்ள (அனுமதி கேட்ட போது) நபி (ஸல்) அவர்கள் அனுமதி வழங்கியதுடன் உம்மு வரகா (றழி) அவர்களை தன் வீட்டில் உள்ளவர்களுக்கு (இமாமத் செய்யுமாறு) இமாமாக நின்று தொழுகை நடத்துமாறு ஏவினார்கள். (சுனன் அபூதாவுத்)

மேற் கூறப்பட் செய்தி ஸஹீஹூ இப்னு குஸைமா, சுனனுன் நசாயி, சுனனுத் தாரகுத்னீ, அல் முஸ்தத்றக் அலா சஹீஹைன் போன்ற கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஹதீஸ் உண்மையில் பலயீனமானதாகும். ஏனெனில் இதன் அறிவிப்பாளர் வரிசையில் பல குறைபாடுகள் உள்ளன.

01) இதில் வரும் 'அப்துர் ரஹ்மான் இப்னு கல்லாத்' என்ற அறிவிப்பாளர் 'நம்பகத் தன்மை' அறியப்படாத ஒருவராவார். எனவே இவரின் அறிவிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது.

02) மேலும் இச்செய்தி 'லைலா பின்த் மாலிக்' என்ற விலாசம் அறியப்படாத மற்றுமோர் அறிவிப்பாளர் ஊடாகவும் அறிவிக்கப்படுகிறது.

இவ்வறிவிப்பானது சுனனுன் நஸாயி, சுனனுத் தாரகுத்னி, சுனன் அபூதாவுத் போன்ற கிரந்தங்களில் இடம் பெறுகிறது.

எனவே இவ்வறிவிப்பும் பலவீனமானதே. ஆக மொத்தத்தில் இச்செய்தியை ஏற்றுக் கொள்ள முடியாது.\

அடுத்ததாக நபி (ஸல்) அவர்களைத் தொட்டும் அஸ்மா (றழி) அவர்கள் அறிவிப்பதாக ஒரு செய்தி 'அல் காமில் பில் லுஅபா' எனும் கிரந்தத்தில் பின்வருமாறு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பெண்களின் மீது அதானோ, இகாமத்தோ, ஜூம்ஆ(த் தொழுகை)யோ, வெள்ளிக் கிழமை குளிப்போ கடமை இல்லை. அவர்களில் எந்தப் பெண்ணும் இமாமாகத் தொழுவிக்கும் போது அவர்களை விட்டும் முன்னாக நிற்க மாட்டாள். எனினும் அவர்களின் மத்தியில் நின்று கொள்வாள். இந்த ஹதீதும் பலயீனமானதாகும்.

ஏனெனில் இதன் அறிவிப்பாளர் வரிசையில் 'ஹகம்' என்ற ஓர் அறிவிப்பாளர் இடம் பெற்றுள்ளார். இவரை ஹதீஸ் கலை அறிஞர்கள் 'பலயீனமானவர்' என இனங்கண்டு குறை கூறியுள்ளனர். ஆகையால் இச்செய்தியையும் ஆதாரமாக ஏற்க முடியாத நிலை ஏற்படுகிறது.

இன்னும் (பிற்காலத்தில்) அன்னை ஆயிஷா (றழி) அவர்கள் ஏனைய பெண்களுக்கு இமாமாக நின்று தொழுவித்ததாக ஒரு செய்தி 'முஸ்னத் அப்துர்ரஸ்ஸாக்', சுன்னுத் தாரகுத்னீ, மற்றும் 'முஹல்லா, போன்ற கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் அதன் அறிவிப்புக்கள் ஒவ்வொன்றையும் பலயீனமானதாகவே காண முடிகின்றது.

இதே போல் அண்ணலாரின் மற்றுமொரு மனைவியான அன்னை உம்மு ஸலமா (றழி) இமாமத் செய்ததாகவும், மற்றும் 'ஒரு பெண் (ஏனைய) பெண்களுக்கு மத்தியில் நின்று தொழுகை நடத்துவாள்' என்று இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் கூறியதாகவும் வரும் செய்திகள் அனைத்திலும் பலயீனங்கள் நிறைந்து காணப்படுவதோடு, அவைகள் ஆதாரத்திற்கு எந்த வகையிலும் ஏற்க முடியாததாகவே உள்ளன.

ஆக தொழுகையானது ஹிஜ்ரி 02ம் ஆண்டு கடமையாக்கப்பட்டிருந்த போதிலும் நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை எந்தவொரு பெண்ணையும் தொழுவிக்க ஏவியதாகவோ, அல்லது தொழுவிக்க அங்கிகரித்து அனுமதித்ததாகவோ எந்தவொரு ஊர்ஜிதமான செய்தியையும் காணமுடியாதுள்ளது.

எனவே இவ்விடயத்தில் நபி(ஸல்) அவர்களின் எந்தவொரு முன்மாதிரியும் கிடைக்காத பட்சத்தில் நாம் எவ்வாறு இவ்விடயத்தை நடைமுறைப்படுத்த முடியும்? சில அறிஞர்கள் 'நபி (ஸல்) அவர்களின் பொதுவான வழிகாட்டல் ஆண்களோடு சேர்த்து பெண்களையும் பொதிந்து கொள்ளும்' என்ற கருத்தை அடிப்படையாக வைத்து ' பெண்கள் ஆண்களைப் போல் இமாமத் செய்யலாம்' என அனுமதியளிக்கின்றனர்

இவ்வாதம் தவறானதாகும். ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் பொதுவாக 'இமாமத் செய்வது' பற்றிக் கூறியது பெண்கள் இமாமத்திற்கு வழிகாட்டியாக இருந்தால் அதனை தான் வாழும் கால கட்டத்தில் நடைமுறையில் கொண்டு வர தவறியிருக்க மாட்டார்கள்.

குறிப்பாக மார்க்கத்தைக் கற்றுக் கொள்வதிலும், அதனை அமுல்படுத்துவதிலும் எங்களை விட ஆர்வம் மிக்க அந்த நபித் தோழியர்கள் இமாமத் செய்திருப்பார்கள். எனினும் இது தொடர்பாக எந்தவொரு சான்றையும் கண்டுகொள்ள முடியாமல் உள்ளது. அத்துடன் தொழுவித்ததாக வரும் சில அறிவிப்புக்களும் கூட பலவீனமான நிலையில் உள்ளதை மேலே பார்த்தோம்.

இதற்கு மாற்றமாக 'முஸன்னப் இப்னு அபீ ஸைபா', 'சுனன் பைஹகி' போன்ற கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு செய்தி ஆயிஷா (ரழி) அவர்களின் நிலைப்பாடு ஒன்றை அறியத்தருகிறது..

அதாவது: அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் தன்னிடமிருந்த 'தக்வான்' என்ற அடிமையை உரிமை விட்டு விட்டு தனக்கு ரமழான் மாதத்தில் இமாமாக நியமித்து, அவரின் பின்னால் தொழுதார்.'

இச்செய்தி ஆயிஷா (ரழி) அவர்கள் ஆண் ஒருவரை இமாமாக நியமித்து அவரின் பின்னாலே தொழுது கொண்டார் என தெளிவுபடுத்துகிறது.

ஆக பொதுவான செய்தியை வைத்து பெண்கள் இமாமத் செய்வதற்கு அனுமதி வழங்குவதாயின், 'வெள்ளிக் கிழமை (குத்பா) பிரசங்கம் நடத்தல்' போன்ற விடயங்களும் பொதுவாகக் கூறப்பட்டவை என்ற ரீதியில் அவற்றையும் பெண்கள் மேற்கொள்ளலாம் என்ற முடிவுக்கு வர வேண்டியிருக்கும்.

எனவே இவ்வாதம் தவறானதாகும்.

ஏனென்றால் சில விடயங்கள் பொதுவாகக் கூறப்பட்டிருந்தாலும் ஒரு சாரார் மட்டுமே அதை நடைமுறைப்படுத்தும் வழக்கு இருந்தால் அதே விடயம் ஏனையவர்களுக்கு அனுமதியா? என்பதைப் பார்ப்பது அவசியமாகும்.

அதிலும் குறிப்பாக 'ஜமாஅத் தொழுவது' என்பது ஆண்களுக்கே வலியுறுத்தப்பட்ட ஒரு விடயமாகும். என்பதால் தான் அதனோடு தொடர்பு படக்கூடிய 'இமாமத்' விடயத்தில் பெண்களின் நிலை என்ன? அவர்கள் இமாமத் செய்ய அங்கீகாரம் கிடைத்துள்ளதா? என்று அலசுவது இவ்விடயத்துக்கு மிகவும் பொருத்தமாகும்.

மேலும் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் பல இக்கட்டான சூழ்நிலைகளைத் தாண்டி ஜமாஅத் தொழுகையை நாடி பள்ளி வாயலுக்கு செல்பவர்களாக இருந்திருக்கின்றனர். பெண்கள் 'இமாமத்' செய்வது அனுமதியாக இருந்திருந்தால் இரவு மற்றும் பஜ்ருப் பொழுதுகளில் 'ஜமாஅத்' தொழுகைக்காக வந்த பெண்களின் பாதுகாப்பினையும், அசௌகரியங்களையும் கருத்திற் கொண்டு நபி (ஸல்) அவர்கள் பெண்களுக்கென வீட்டில் கூட்டாகத் தொழும் நடைமுறையை அமைத்து அவர்களில் இருந்தே நன்கறிந்த ஒரு பெண்ணை இமாமாக நியமித்து, தொழுகை நடாத்த ஏவியிருக்கலாம்.

ஆகவே 'மார்க்கம் கூட்டுத் தொழுகையின் மூலம் ஆண்கள் பெறும் பண்மடங்கு கூலிகளைப் போன்று பெண்கள் ஏற்றுக் கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்கவில்லையா? அதிக நன்மைகளை சம்பாதிக்க ஆசைப்படும் பெண்களுக்கான வழிதான் என்ன? என்ற கேள்விகள் எழும்பலாம்.

இஸ்லாம் மாரக்கமானது ஒவ்வொருக்கும் பொருத்தமான விடயங்களையே அவர்களுக்கென வழங்குகிறது. அவ்வகையில் கிலாபத் (ஆட்சி) தலைமைத்துவம், ஜிஹாத் (போராட்டம்) போன்ற விடயங்களை ஆண்களின் கரங்களிலேயே ஒப்படைத்துள்ளது.

பெண்கள் தனக்கு சந்தர்ப்பம் கிட்டுமிடத்து ஆண்களின் தலைமையின் கீழ் அவர்களோடு இந்த விடயங்களில் கலந்து கொள்ளலாம். அதனாலேயே ஸஹாபாப் பெண்களில் பலர் போராட்டங்களில் கலந்து கொண்டதாக வரலாறு குறிப்பிடுகின்றது.

இவ்வகையில் 'ஜமாஅத்' தொழுகையின் சிறப்பை நாடும் பெண்கள் ஆண்கள் கூட்டாகத் தொழும் வேளைகளில் அவர்களோடு சேர்ந்து தொழுது கொள்ளலாம். இதனாலேயே நபி (ஸல்) அவர்கள் பெண்கள் மஸ்ஜிதை விட்டும் தடுக்கப்படக் கூடாது என உத்தரவு பிறப்பித்தனர்.

அவ்வாறு சந்தர்ப்பம் கிடைக்காதவிடத்தில் அவர்கள் (தங்களின் வீடுகளில்) தனியாகத் தொழுது கொள்வார்கள். 'ஒரு பெண் தனது வீட்டில் தொழுது கொள்வது அவளுக்கு சிறந்தது' என்பதில் எவருக்கும் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. அதனையே இப்னு மஸ்ஊத் (ரழி) போன்ற சஹாபிகளும் தெரிவித்திருக்கின்றனர்.

ஒவ்வொருவரின் உள்ளங்களையும் நன்கறிந்த அல்லாஹ்வே பன்மடங்கு நன்மையை நாடியும் சந்தர்ப்பம் கிடைக்காத பெண்களுக்கான கூலிகளை வழங்கப் போதுமானவனாகவும் இருக்கின்றான்.

ஆக 'ஜமாஅத்துடன் தொழுது நன்மைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசை கொள்ளும் பெண்கள்' நபியவர்கள் அனுமித்த வகையில் ஆண்களுடன் இணைந்து பள்ளிவாயல்களில் தொழுது கொள்வார்கள். அல்லது தங்களுக்காக ஒரு ஆணை இமாமாக நியமதித்து அவரின் பின் நின்று தொழுகையை நிறைவேற்றுவார்கள்.

இவை இரண்டும் கிடைக்காத பட்சத்தில் தனிமையில் தங்கள் தொழுகைகளை நிறைவேற்றிக் கொள்வதே நடுநிலையான றஸூலுல்லாஹ்வின் நடைமுறையை வாழ்வில் எடுத்து நடக்கும் ஒவ்வொருவரினதும் பண்பாகும். தவறும் பட்சத்தில் சுன்னாவின் எல்லையை மீறிவிட்டவர்களாக மாறி விடலாம்.

அல்லாஹ் அறிந்தவனாகவும் செயல்களுக்கு கூலி வழங்குபவனாகவும் உள்ளான்.


உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்...