பெருநாளில் தொழும் திடலுக்குச் சாப்பிடாமல் தான் போக வேண்டுமா? - மௌலவியா ஏ. பர்வின் ஷரயிய்யா

நோன்புப் பெருநாள் தினங்களில் பெருநாள் தொழுகைக்காக திடலுக்குச் செல்லும் போது ஏதாவது ஒன்றை சாப்பிட்டு விட்டுச் செல்கின்ற நபி வழியைப் பின்பற்றுகின்ற நம்மில் பலர் ஹஜ்ஜூப் பெருநாள் தினங்களில் சாப்பிடாமல் செல்லக் கூடியவர்களாக இருக்கின்றனர். அதற்குக் காரணம் ''அது தான் நபிகளாரின் வழிமுறை'' என்று அவர்களுக்கு போதிக்கப்பட்டமையே. எனவே அது உண்மையிலேயே நபி வழிதானா? என அலசுவோம்.

''நோன்பு பெருநாள் தினங்களிலே நபி (ஸல்) அவர்கள் பேரீச்சம் பழத்தை சாப்பிடும் வரை தொழுகைக்கு செல்ல மாட்டார்'' என்று அனஸ் (ரழி) வாயிலாக புஹாரி மற்றும் இன்னும் சில கிரந்தங்களில் ஆதாரமான ஓர் செய்தி பதிவாகியுள்ளது.
அதே போன்று, ''ஹஜ்ஜூப் பொருநாள் தினங்களிலே நபி (ஸல்) அவர்கள் தொழும் வரை சாப்பிடமாட்டார்கள்'' என்ற மேலதிகமான ஒரு செய்தி புரைதா (ரழி) அவர்கள் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஆதாரமாக ஏற்றுத்தான் இந்த நடைமுறை எம்மத்தியில் இருந்து வருகிறது.

என்றாலும் இந்த ஹதீஸ் குறைபாடுகள் உள்ள பலவீனமான ஓர் செய்தியாகும். அது பற்றிய விளக்கத்தை என் சக்திக்குற்பட்ட வகையில் முன்வைக்கின்றேன்.

அல் ஹதீஸ்:

புரைதா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் : '' நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் தினத்தில் சாப்பிடும் வரை (தொழுகைக்கு) வெளியேறாதவராகவும் ஹஜ்ஜூப் பெருநாள் தினங்களில் தொழும் வரை சாப்பிடாதவராகவும் இருந்தார்கள்.

சில அறிவிப்புகளில், ''உழ்ஹிய்யா கொடுக்கும் வரை சாப்பிடமாட்டார்'' என்றும் மற்றும் சில அறிவிப்புகளில் ''திடலில் இருந்து திரும்பும் வரை சாப்பிடமாட்டார்'' என்றும் வந்துள்ளது.

இது இமாம் திர்மிதி (ரஹ்) யின் ''ஸூனன்'' என்ற கிரந்தத்திலும் இமாம் அஹ்மத் (ரஹ்) இன் ''முஸ்னத்'' என்ற கிரந்தத்திலும் இமாம் தாரமி (ரஹ்) அவர்களுக்குரிய ''ஸூனனுத் தாரமி', இமாம் தப்ரானிக்குரிய ''அல்முஃஜமுல் அவ்ஸத்'' யிலும் இமாம் இப்னு ஹூஸைமாவுக்குரிய ''ஸஹீஹ் இப்னு ஹூஸைமா'' போன்ற இன்னும் பல கிரந்தங்களிலும் பதிவாகியுள்ளது.

குறைபாட்டிற்கான காரணம்

இந்த செய்தியை புரைதா (ரழி) யிடமிருந்து அவரது மகன் ''அப்துல்லாஹ்'' கேட்டு அறிவிக்கின்றார். அவரிடமிருந்து இருவர் கேட்கிறார்கள். அவர்கள் இருவரும் குறைபாடுகள் உள்ள பலவீனமான அறிவிப்பாளர்களாகும். அவர்கள் இருவர் வாயிலாகவும்தான் இந்த செய்தி அறிவிக்கப்படுகிறது.

அதிலே முதலாமவர்:

உக்பா இப்னு அப்தில்லாஹ் அல் அஸம் அர்ரிபாயி : இவர் மிகவும் பலவீனமான ஓர் அறிவிப்பாளராவார். ஹதீஸ் கலையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பெரும்பாண்மையான அறிஞர்கள் இவர் ''உறுதியற்றவர்'', ''பலவீனமானவர்'' என்ற வார்த்தைப் பிரயோகங்களையே உபயோகித்து இவரைப் பற்றிக் கூறியுள்ளார்கள். எனவே இவர் இடம் பெற்றுள்ள அறிவிப்பாளர் வரிசை இவரால் மிகவும் பலவீனமானதாக ஆகி விடுகின்றது.

இவரைப் போன்று இவரின் ஆசானிடமிருந்து கேட்ட இரண்டாம் நபர் ''தவ்வாப் இப்னு உத்பா'' ஆவார். ஹதீஸ் கலை அறிஞர்களில் ஓரிருவர் அவரை உறுதியானவர்களின் பட்டியலில் கொண்டு வந்தாலும் பெரும்பாண்மையானவர்கள் அவரை விமர்சித்திருக்கின்றார்கள்.

இவரின் நிலை பற்றி அறிஞர்களின் கருத்துக்கள்

இமாம் அபூதாவுத் அஸ்ஸஜஸ்தானீ (ரஹ்) அவர்கள், ''நம்பகத்தன்மையில் இவர் பரவாயில்லை'' என்று கூறுகிறார்.

இன்னும் இமாம் இப்னு மயீன் (ரஹ்) அவர்கள் இவர் பற்றி இரண்டு கருத்துக்களை முன்வைக்கின்றார்கள் : 

ஒரு தடவை, ''பலவீனமானவர் என்று கூறும் அளவுக்கு இவரிலே குறை இருக்கிறது'' என்றும் மற்றுமோர் தடவை, ''இவர் உறுதியானவர்'' என்றும் கூறுகிறார்.

இமாம் இப்னு மயீன் (ரஹ்) அவர்கள் இவர் பற்றி இவ்வாறு இரண்டு கருத்துக்கள் கூறயிருக்கும் வேளை ''இமாம் அபூஹாதிம்'', ''இமாம் அபூஸூர்ஆ'' போன்றோர் ''இவர் உறுதியானவர்'' என்ற கூறும் அவரின் கருத்துக்கு மறுப்புத் தெரிவிக்கின்றார்கள்.

மேலும் ''இமாம் இப்னு அதீ (ரஹ்) அவர்கள் பலவீனமான அறிவிப்பாளர்கள் பற்றி விபரிக்கும் ''அல்காமில் பில் ளுஅபாஃ'' என்ற அவரது கிரந்தத்தில் இவரைக் கொண்டு வருகிறார்.

அதனால் ''இமாம் இப்னு கய்ஸரானீ (ரஹ்) அவர்கள் ''தஹீரதுல் ஹூப்பாழ்'' என்ற அவரது கிரந்தத்தில் இவரைப் பற்றி இப்னு அதீ (ரஹ்) அவர்கள் சொன்னதாக பின்வரும் கூற்றை முன்வைக்கின்றார்.

''தவ்வாப் இந்த ஹதீஸின் மூலமாகவே அறியப்படுகின்றார். அவரோ பலவீனமானவராவார்''. இன்னும் ''இமாம் இஜ்லி (ரஹ்) அவர்கள், ''இவரது ஹதீஸ் எழுதிவைக்கப்படும், (என்றாலும்) இவர் உறுதியானவர் இல்லை'' என்று கூறுகிறார்.

அதே போன்று,

இமாம் புஹாரி (ரஹ்) அவர்களோ, ''மேற் சொல்லப்பட்ட இந்த ஹதீஸைத் தவிர வேறு எந்த ஹதீஸையும் இவர் அறிவித்ததாக நான் அறிய மாட்டேன்'' என்று கூறுகிறார்.

''புஹாரி (ரஹ்)'' அவர்கள் ஒரு அறிவிப்பாளரைப் பற்றி இவ்வாறு கூறுகிறாரென்றால் அதன் அர்த்தம் அந்த அறிவிப்பாளரை அவர் குறையுள்ளவராக கண்டிருக்கிறார் என்பதாகும்.

ஹதீஸ் கலை விதி

ஒரு அறிவிப்பாளரைப் பற்றி ஓரிருவர் 'நம்பகமானவர் என்று கூறி, அநேகமானவர்கள் அவரை ''பலவீனமானவர்'' என்று கூறினால் அந்த நேரத்தில் அநேகமானவர்களின் கருத்தையே இறுதியாக எடுக்க வேண்டும். ஏனென்றால் ''நம்பகமானவர்'' என்று அவர் விடயத்தில் முடிவ சொன்ன அறிஞர்களுக்கு சில வேளை அவரின் குறைபாடுகள் தென்படாமல் இருந்திருக்கலாம். இதனால் அவர்கள் அறிவிப்பாளர் விடயத்தில் ''உறுதியானவர் எனத் தீர்ப்பளித்து விட்டார்கள். 

எனவே இந்த விதியின் அடிப்படையில் ''தவ்வாப் இப்னு உத்பா'' என்ற இந்த அறிவிப்பாளர் ''பலவீனமானவர்'' என்பது தெளிவாகிறது.

ஏனென்றால் ஓரிருவர் தவிர பலர் அவரை விமர்சித்திருக்கின்றார்கள். அது மட்டுமன்றி ''இமாம் இப்னு மயீன் (ரஹ்)'' ஒரு தடவை ''பலவீனமானவர்'' என்றும் மறு தடவை, ''உறுதியானவர்'' என்றும் கூறுகின்றார். அவ்வாறிருக்க, ''உறுதியானவர்'' என்று கூறிய அவரின் கருத்துக்கு நேரடியாக மறுப்பும் தெரிவிக்கப்படுகிறது. அது தவிர, அவரைக் குறையுள்ளவராகக் கருதிய பெரும்பான்மையான அறிஞர்கள் ''இமாம் இப்னு மயீன் (ரஹ்)'' அவர்களின் இக் கருத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதும் இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது.

ஆக அநேகமானவர் பார்வையில் ''குறையுள்ளவர்'' என இனங்காணப்பட்ட இந்த அறிவிப்பாளர் ''பலவீனமானவர்'' என்பதே இதிலிருந்து புலப்படுகின்ற விடயமாகும்.

இதனால்தான், அறிவிப்பாளர்கள் பற்றிய முன்னோர்களின் தரவுகளைத் தொகுத்துத் தந்து தரம் பிரித்துக் காட்டிய 7ம், 8ம் நூற்றாண்டிற்கிடைப்பட்ட காலத்தில் வாழ்ந்து மறைந்த, மாபெரும் இரு ஹதீஸ்கலை மேதாவிகளான ''இமாம் தஹபீ (ரஹ்) அவர்களும் ''இமாம் இப்னு ஹஜர் (ரஹ்)'' அவர்களும் இவர் விடயத்தில் ''இமாம் இப்னு மயீன் (ரஹ்) அவர்கள் கூறிய ''உறுதியானவர்'' என்ற கூற்றை ஏற்றுக் கொள்ளாமல் இவரைப் பற்றி பின்வருமாறு கூறுகின்றார்கள்.

இமாம் தஹபீ (ரஹ்) கூறுகின்றார்கள் : ''இவரிலே பலவீனம் இருக்கின்றது.''

இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) : கூறுகின்றார்கள் : ''ஏற்றுக் கொள்ளத்தக்க ஒருவர் இவருக்கு துணையாக அறிவிக்கும் போது ஏற்றுக் கொள்ளப்படுவார். அவ்வாறில்லையென்றால் ஏற்றுக் கொள்ளத தகுதியற்றவராக விடப்படுவார்.''

இந்த இடத்தில் இவருக்குத் துணையாக இவரை விட மிகவும் பலவீனமான அறிவிப்பாளரான ''உக்பா''வைத் தவிர நாம் அறிந்தவரை வேறு எவருமே இதை அறிவிக்கவில்லை.

எனவே இந்த செய்தி பலவீனமாவதற்கு இது போதுமான காரணியாகும்.

அதே போன்று, ''இப்னு அப்பாஸ் (ரழி)'' மற்றும் ''ஜாபிர் இப்னு ஸமுரா (ரழி)'' ஆகியோர் வாயிலாக இதே கருத்தில் சில செய்திகள் அறிவிக்கப்படுகிறது.

அவையும் துணைச்சான்றுக்கு எடுக்க முடியாத மிகவும் பலவீனமான அறிவிப்பாளர் வரிசையுடன் கூடிய செய்திகளாகும்.

ஆக ஹஜ்ஜூப் பெருநாள் சம்பந்தமாக ''தவ்வாப் இப்னு உத்பா'' அறிவிக்கும் இந்த செய்தி வேறு உறுதியான அறிவிப்பாளர்களால் அறிவிக்கப்பட்டதால் அது பலவீனமானதுதான் என்பது ஊர்ஜிதமாகின்றது. எனவே இவ்வாறான ஒரு பலவீனமான ஹதீஸை ஏற்று மார்க்க சட்டமாக அதை நடைமுறைப்படுத்துவதிலிருந்தும், ''அதுதான் நபிகளாரின் வழிமுறை'' என்று மக்களுக்கு பிரச்சாரம் செய்வதிலிருந்தும் தவிர்ந்து கொள்ள வேண்டும்.

இதன் விபரீதம்

''ஹஜ்ஜூப் பெருநாள் தினங்களிலே நபி (ஸல்) அவர்கள் தொழும் வரை சாப்பிடமாட்டார்கள்'' என்ற செய்தி நம்மத்தியில் பரவலாக உள்ளதால் பலரும் அதை உண்மை என நம்பி, நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். இதன் காரணமாக காலை உணவு சாப்பிட வேண்டும் என்ற தேவையுள்ள நோயாளிகள் கூட நபி வழியைப் பின்பற்ற வேண்டும் என்ற நோக்கில் சாப்பிடாமலேயே தொழுகைக்காக திடலுக்குச் செல்கின்றார்கள்.

அதுமட்டுமன்றி, சாப்பிடாமல் செல்வதை கட்டாயம் எனக் கருதுகின்றவர்கள் சாப்பிட்டு விட்டுச் செல்கின்றவர்களை குற்றவாளிகள் போல் நோக்குகின்றனர். அதற்குக் காரணம் ''அவ்வாறு செய்கின்றவர்கள் நபி வழியொன்றை புறக்கணித்து நடக்கின்றார்கள்'' என்று அவர்கள் தவறாகக் கருதியமையே.

முடிவு

''நோன்புப் பெருநாளில் நபி (ஸல்) அவர்கள் பேரீச்சம் பழத்தை சாப்பிட்டுவிட்டுத் தொழுகைக்குச் சென்றார்'' என்ற தெளிவாக வந்தது போன்று ''ஹஜ்ஜூப் பெருநாளில் சாப்பிடாமல் சென்றார்'' என்று ஆதாரமான அறிவிப்புகள் எதுவுமே வரவில்லை.

மாறாக, ஹஜ்ஜூப் பெருநாளிலே தொழுகைக்கு முன் சாப்பிட்டுவிட்டுச் சென்ற ஒரு நபித்தோழருக்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதி வழங்கிய சம்பவம் பராஃ இப்னு ஆஸிப் (ரழி) வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது.

(ஹஜ்ஜூப் பெருநாள் தினத்திலே உரையாற்றும் வேளை) நபி (ஸல்) அவரகள், ''தொழுகைக்குப் பின்புதான் அறுக்கும் பிராணி அறுக்கப்பட வேண்டும்'' என்று சொன்ன போது அபூ புர்தா பின் நியார் (ரழி) அவர்கள் எழுந்து, ''நான் எனது (தொழுகைக்கு வருவதற்கு முன்) ஆட்டை அறுத்து, காலை உணவாக உட்கொண்டு விட்டேன்'' என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) ''அது உனது உணவுக்குரிய ஆட்டிறைச்சி'' என்ற கூறினார்கள்.

அதாவது மீண்டும் அவர் உழ்ஹிய்யாவின் பிராணியை அறுக்கு வேண்டும் என்பதை இந்த கூற்றின் மூலம் வலியுறுத்தினார்கள். புஹாரி 955 (சம்பவத்தின் சுருக்கம்)

இந்த இடத்தில் நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகைக்குச் செல்வதற்கு முன்பு சாப்பிட்டு விட்டு வந்த ஸஹாபிக்கு எந்தவிதமான மறுப்பையும் தெரிவிக்கவில்லை. உண்மையிலே சாப்பிட்டுவிட்டுச் செல்வது அவர்களது நபிவழிக்கு மாற்றமாக இருந்தால் அவருக்கு அந்த நேரத்தில் அங்கீகாரம் அளித்திருக்க மாட்டார்கள். அதே வேளை, நோன்புப் பெருநாள் தினங்களில் நபி (ஸல்) சாப்பிட்டுவிட்டுச் செல்வதை வழக்கமாக்கிக் கொண்டது போல் ஹஜ்ஜூப் பெருநாள் தினங்களிலும் அவ்வாறு சென்றதாக ஆதாரமான அறிவிப்புகள் எதுவும் வரவில்லை.

அவ்வாறே சாப்பிட்டு வந்த நபித் தோழருக்கு எந்த வித மறுப்பும் தெரிவிக்கவுமில்லை. எனவே, விரும்பியவர் சாப்பிட்டுவிட்டும் செல்லலாம் சாப்பிடாமலும் செல்லலாம் எதை செய்தாலும் அவர் மீது குற்றமில்லை என்பதுதான் எமத இந்த ஆய்வு கூறும் முடிவாகும்.

ஆகவே, நபி (ஸல்) அவர்களின் இந்த வழிகாட்டலோடு நின்று கொள்வோம். அல்லாஹ்வே உண்மையின் பால் வழிநடத்தப் போதுமானவன்.