மறுக்க முடியுமா - அப்துல் ஹமீட் (ஸரயி)

மனித வாழ்வுத் தொடக்கத்தில் இருந்து இன்று வரை அல்லாஹ்வின் கட்டளைகளை மறுக்கும் நிலை இருந்து கொண்டே இருக்கிறது. இதற்கு காரணம் பெருமைகள். இதை கர்வம், அகங்காரம், தற்பெருமை, ஆணவம், என்னை மீற ஆளுண்டா எனும் நிலை என்றெல்லாம் கூறலாம். இவைகள் மட்டுமல்ல தவறுகள் சுட்டிக்காட்டப்படும் போது அதனை ஏற்றுக் கொள்ளமுடியாத நிலையும் பெருமையே.

மனோ இச்சைக்கு முதல் இடம் கொடுத்து தற்பெருமையை தலைக்கு மேல்வைத்தால் பல்கலைக்கழகம் போகாமலும் (நினைப்பில்) வைத்தியனாகலாம். அழைப்புக்கு பதில் செல்ல அடுத்தவனை வைத்துவிட்டு ஆள் கடும் பிசி என மாயத்தோற்றத்தையும் மறைமுகமாக உருவாகலாம். ஆனால் தவறுகள் சுட்டிக்காட்டப்படும் போது அதனை ஏற்றுக் கொள்ளமுடியாதவாறு நிலை ஆபத்தானது.
அல்லாஹ்வின் கட்டளைக்கு முதல் முதலில் மாறு செய்த இப்லிஸ் கூட பெருமையின் காரணத்தால்தான் மறுத்தான் என அல்குர்ஆன் சொல்கிறது.

பின்னர் நாம் மலக்குகளை நோக்கி, 'ஆதமை ( சங்கைப் படுத்துவதற்)காக ஸுஜுது செய்)யுங்கள்' என்று சொன்னபோது இப்லீஸைத்தவிர மற்ற அனைவரும் சிரம் பணிந்தனர் அவன் (இப்லீஸு) மறுத்தான் ஆணவமும் கொண்டான் இன்னும் அவன் காஃபிர்களைச் சார்ந்தவனாகி விட்டான். 2:34

நெருப்பால் படைக்கப்பட்ட நான் மண்ணால் படைக்கப்பட்ட மனிதனுக்கு சுஜுது செய்வதா?

'நான் உனக்குக் கட்டளையிட்ட போது, நீ ஸஜ்தா செய்யாதிருக்க உன்னைத் தடுத்தது யாது?' என்று அல்லாஹ் கேட்டான் 'நான் அவரை (ஆதமை) விட மேலானவன் - என்னை நீ நெருப்பினால் படைத்தாய். அவரை களிமண்ணால் படைத்தாய்' என்று (இப்லீஸ் பதில்) கூறினான். 7:12

இந்தக் கேள்விக்குள் மறைந்திருக்கும் அகங்காரம், பிடிவாதம், தற்பெருமை எவ்வளவு ஆபத்தானது என்பதை அவன் அப்போது அறிந்திருக்க நியாயம் இல்லை. மண்ணை விட நெருப்பு சிறப்பானது என்பதை தீர்மானிப்பது யார்? அல்லாஹ்வின் கட்டளைக்கு முன்னால் நமது சுயவிருப்பு, பிடிவாதம், அகங்காரம் என்பவை எவ்வளவு தூரம் தாக்குப்பிடிக்கும்.

அல்லாஹ் இட்ட கட்டளையை எவ்வளவு தூரம் கட்டிக்காப்பது அவசியமானது என்பதை எல்லாம் ஒரு நிமிடம் பெருமை திரையிட்டு மறைந்திருக்கிறது. இங்கே பெருமை அடிப்பது என்பது இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையில் நடக்கும் யுத்தம் என்றுதான் சொல்லவேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் கூறியதாக சொன்னார்கள் 'கண்ணியம் எனது வேட்டி. பெருமை எனது போர்வை. யார் இது விடயத்தில் என்னுடன் பிணங்கிக் கொள்கிறாரோ அவரை நான் தண்டிப்பேன்' (ஆதாரம் : முஸ்லிம்)

இங்கு பெருமை அடிப்பவன் என்னுடன் பிரட்சினை கொள்கிறான் என்றும் அவனை நான் தண்டிக்கிறேன் எனவும் அல்லாஹ் சொல்வதை திறந்த மனதுடன் ஒருகணம் நாம் சிந்திக்க வேண்டும். நம்மிடம் பெருமை அடிக்க என்ன இருக்கிறது. நமது உடல், உயிர், உடமை, அழகு, அறிவு, அந்தஸ்து எல்லாமே அல்லாஹ் நமக்கு தந்த அருள்கள்தான் நாமாக எதையும் கொண்டுவரவும் இல்லை. கொண்டு வரவும் முடியாது. நாம் மனிதனாக பிறக்க நாம் நினைத்தோமா? அல்லது நமது தாய் தந்தையர் யாராவது நினைத்தார்களா? நமது அழகு, அந்தஸ்து, அறிவு, பேச்சாற்றல் எல்லாமே யார் தந்தார்? இவைகள் எல்லாம் நம் திறமையால் நிகழ்ந்தவையா? அல்லது அல்லாஹ்வின் சித்தமா?

மனிதன் தான் இன்னதென்று கூறப்படக்கூடிய ஒரு காலம் அவனுக்கு இல்லாமலிருந்த ஒரு நேரம் அவனுக்கு வரவில்லையா? (அல் - குர்ஆன் 76:01)

பிறகு (நழுவும்) அற்பத் துளியாகிய (இந்திரிய) சத்திலிருந்து, அவனுடைய சந்ததியை உண்டாக்கினான். (அல்குர்ஆன் 32:8)

என்றெல்லாம் இறைவன் சொல்கிறான் நமது பலத்தைப் பற்றிச் சிந்திக்கிறோமே அல்லாமல் நமது பலஹீனத்தைப்பற்றிச் சிந்திக்க நாம் தவறி விடுகிறோம். காரூன் எனும் கர்வம் கொண்டவன் பற்றி கருணை உள்ள அல்லாஹ் சொல்கிறான்.

' நிச்சயமாக, காரூன் மூஸாவின் சமூகத்தைச் சேர்ந்தவனாக இருந்தான் எனினும் அவர்கள் மீது அவன் அட்டூழியம் செய்தான் அவனுக்கு நாம் ஏராளமான பொக்கிஷங்களைக் கொடுத்திருந்தோம் - நிச்சயமாக அவற்றின் சாவிகள் பலமுள்ள ஒரு கூட்டத்தாருக்கும் பளுவாக இருந்தன அப்பொழுது அவனுடைய கூட்டத்தார் அவனிடம் 'நீ (இதனால் பெருமைகொண்டு) ஆணவம் கொள்ளாதே! அல்லாஹ், நிச்சயமாக (அவ்வாறு) ஆணவம் கொள்பவர்களை நேசிக்கமாட்டான்' என்று கூறினார்கள்.' (அல்குர்ஆன் : 28:76)

அதற்கு காரூன் சொன்ன பதில்

(அதற்கு அவன்) கூறினான் 'எனக்குள்ளே அறிவின் காரணத்தால் தான் இதனை நான் கொடுக்கப்பட்டிருக்கிறேன்!' 28:78

மனிதன் அல்லாஹ்வை மறந்தான். ஆணவம் கொண்டான் நான் என்ற வார்த்தையில் அகம் மகிழ்ந்தான் ஆனால் அல்லாஹ்வும் அவன் போர்வை என்று சொன்ன விடயத்தில் தன்னுடன் பிணங்கியவனை பிணமாக்க வல்லமை உள்ளவன்தானே. கர்வம் கொண்ட காரூனை அவன் வீட்டோடு சேர்த்து பூமிக்குள் மூழ்கடிக்கச் செய்தான்.

ஆகவே, நாம் காரூனையும் அவன் வீட்டையும் பூமியில் அழுந்தச் செய்தோம் அல்லாஹவையன்றி அவனுக்கு உதவி செய்கிற கூட்டத்தார் எவருமில்லை இன்னும் அவன் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளவும் முடியவில்லை. அல்குர்ஆன் 28:81

உலகிலேயே மிகப்பெரிய கப்பலான டைட்டானிக் கப்பலை செய்துவிட்டு அது பற்றி கருத்துத் தெரிவிக்கிறார்கள். அதன் தொழில் நுட்பம் உன்னதமானது. உயர்ந்தது எந்தக கடவுளாலும் இதை அழிக்க முடியாது'. தனது அறிவாற்றலில் அவ்வளவு பெரிய நம்பிக்கை அவர்களுக்கு. இயந்திர இயக்கம் சரிபார்க்கப்பட்டு அனைவரும் ஏறிக்கொண்டு வெள்ளோட்டம் விட்டனர் கூடவே கர்வம், அகங்காரம், தற்பெருமை, என்பனவும் சேர்ந்து ஏறிக்கொண்டது.....

இடை நடுவிலே ஒரு குச்சியைப்போன்று டைட்டானிக் கப்பலை இரண்டு துண்டுகளாக முறித்து கடலுக்கடியில் போட்டான் அல்லாஹ். என்ன நடந்தது, எவ்வாறு முழ்கியது, எப்படி முறிந்தது, என்பதெல்லாம் காலம் கடந்த ஞானம்தான் கண்டவர் யாரும் கிடையாது.

தனது தோட்டம் அழிவைச் சந்திக்காது எனப் பெருமையாகப் பேசிய ஒருவரது தோட்டம் அழிக்கப்பட்டது குறித்து சூறா அல்கஃப் பேசுகின்றது.

(பெருமையினால்) தன் ஆத்மாவுக்குத் தீங்கிழைத்தவனாக தன் தோட்டத்திற்குள் நுழைந்தான் அவன், 'இந்த(த் தோட்டம்) எப்பொழுதாவது அழிந்துவிடும் என்று நான் எண்ணவில்லை.'என்றும் கூறிக் கொண்டான்.' 18:35

'அவனுடைய விளை பொருட்கள் அழிக்கப்பட்டன. அதற்காக தான் செலவு செய்ததைக் குறித்து (வருந்தியவனாக) இரு கைகளையும் பிசைந்து கொண்டிருந்தான். அ(த் தோட்டமான)து வேரோடு சாய்ந்து கிடக்கின்றது. (இதனைப் பார்த்த) அவன் 'என் இறைவனுக்கு எவரையும் நான் இணை வைக்காமல் இருந்திருக்க வேண்டுமே!' என்று கூறினான்.'18:42

இன்றுகூட விஞ்ஞானத்தில் உயர்ந்தது தொழில் நுட்பத்தில் வானம் வரை வளர்ந்த நாடுகள் தங்களது அறிவாற்றலை நம்பி இறை நம்பிக்கையை நழுவவிட்டுவிட்டனர். இந்த அடிப்படையில் மேற்படி அளவுக்கு அதிகமான றிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டால் ஜப்பானிய அணு உலைகளால் பாரிய ஆபத்து ஏற்படலாமென 2008 களில் சர்வதேச அணுச் சக்தி அமைப்பு ஜப்பானை எச்சரித்து இருந்ததாக விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணமொன்று குறிப்பிடுகின்றது.

இதில் சிந்திக்க வேண்டிய அம்சம் என்ன என்றால், ஜப்பான் பூகம்ப பூமி என்பதால் கடுமையான பூகம்பம் ஏற்பட்டால் அணு உலைகளுக்குப் பாதிப்பு ஏற்படுமா? என டாய்ச்சா அணு உலை அமைக்கப்படும் போது வினவப்பட்டது.

அப்போது, இந்த அணு உலையை அசைக்கக் கூடிய அளவுக்கு பெரும் நில நடுக்கம் ஏற்படாது என ஜப்பான் அரசு பதிலளித்தது.

மனிதன் என்னதான் தொழில் நுட்பத்தில் முன்னேறினாலும் தனக்கும் மேலே ஒரு சக்தி இருக்கின்றது என்பதை மறந்து பேசலாகாது.

இன்று இந்தப் பெருமையை பெரும்பாண்மையான மக்களிடத்தில் காணக்கூடியதாக உள்ளது. கரண்டைக் காலுக்குக் கீழ் ஆடை அணிபவர்கள் கேட்டால் பெருமையில்லாமல் அணியலாம் என்கிறார்கள்.

இது பற்றிய ஹதீஸ்களை திறந்த மனதுடன் பார்த்தால் நிச்சயம் அதிலிருந்து பல உண்மைகளை நாம் உணரலாம். முடிவை முதலில் எடுத்து விட்டு மனோ இச்சை எனற கண்ணாடி ஊடாக பார்த்தால் ஹதீஸ்கள் கூட நமக்கு சாதகமாகத்தான் தெரியும். மார்க்த்தின் பெயரால் பிழை செய்யக் கூடிய ஒவ்வொருவரும் தங்கள் செயலை நியாயப்படுத்த தங்கள் செயலுக்கு அல்குர்ஆன் அல் ஹதீஸைத்தான் ஆதாரம் காட்டுகிறார்களாம்.

இதன் மூலம் மக்களிடமிருந்து தப்பிக் கொண்டாலும் அல்லாஹ்விடம் இருந்து தப்ப முடியாது என்பதை மறந்துவிட்டீர்களா?


உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்...