முஃமினான பெண்ணிடம் இருக்க வேண்டியதும் இருக்கக்கூடாததும். (01) - மௌலவியா றிப்கா அஷ்ஷரயியா

புகழனைத்தும் இறைவன் ஒருவனுக்கே..

அடிமைத்தனத்திலும், மடமைத்தனத்திலும் வேரூன்றி வாழ்ந்த அந்த ஜாஹிலிய சமுதாயத்தில் பெண் சமுதாயம் பல இன்னல்களுக்கும் துயரங்களுக்கும் முகம் கொடுக்க நேரிட்டனர். ஆண்களுக்கு கொடுக்கப்பட்ட ஒந்தவொரு உரிமையும் பெண்களுக்கு வழங்கப்படவில்லை. சமூகத்தில் ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்திலே நோக்கப்பட்டனர். பெண் பிள்ளை பிறந்து விட்டால் அதை உயிருடன் புதைக்கக்கூடியவர்களாக இல்லையெனில் இழிவான ஒரு நிலையில் அதை விட்டுவைக்கக்கூடியவர்களாக இருந்தார்கள்.

அவளை அவர்கள் நோக்கியதெல்லாம் ஒரு இன்பப்பொருளாகவேதான் இருந்தது. எந்தளவுக்கெனில் அப்பெண்ணுக்கு பிள்ளை பிறந்து விட்டால் அந்தப் பிள்ளையின் சாயலை வைத்துத்தான் தந்தையை குறிப்பாக்கினர். இந்த அளவு ஜாஹிலிய சீர்கேட்டில் பெண்கள் சிக்கித் தவித்தனர். இது நாங்கள் அறிந்த விடயமே. இவ்வேளையில் இப்பெண்களுக்கு குரல் கொடுத்து அறியாமைக்கால பண்புகளிலிருந்து மீட்டெடுத்த இஸ்லாம் அவர்களுக்குரிய கடமையுணர்வுகளையும் உணர்த்திக் காட்டுகிறது.

அவ்வாறே ஆண்களின் செயலை வைத்து அந்தஸ்தை உயர்த்திக் காட்டிய ஜாஹிலியக் காலத்திற்கு மாற்றமாக பெண்களும் சிறந்த செயலால் கௌரவப்படுத்தக்கூடியவர்கள் என்று இஸ்லாம் கீழ்வரும் வசனம் மூலம் எடுத்துக் காட்டி பெண்களை சிறப்புப்படுத்துகிறது.

'ஆண் அல்லது பெண் - விசுவாசம் கொண்டவராக இருக்க யார் நற் செயலை செய்தாரோ நிச்சயமாக நாம் அவரை நல்ல வாழ்க்கை வாழச் செய்வோம். இன்னும் நிச்சயமாக அவர்களுக்கு அவர்களது கூலியை அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றில் மிக அழகானதைக் கொண்டு நாம் கொடுப்போம்.' (அந்நஹ்ல் - 97)

இவ்வாறான உரிமைகளையும், அந்தஸ்துக்களையும் கொடுத்து சிறப்புப்படுத்திய இஸ்லாம், அவள் தனது வாழ்க்கையை சீரான வழியால் நடத்திச் செல்ல பெண்ணுக்கென குறிப்பான ஒழுக்கநெறிகளையும் வணக்க வழிபாடுகளையும் குறிப்பாக்கியுள்ளது.

குறிப்பாக:-

01. பெண்னிண் உடல் அலங்காரம்.

பெண்ணைப் பொறுத்த வரையில் தன்னை அலங்கரிக்கும் ஆர்வத்தை அதிகம் கொண்டவளாக இருக்கிறாள். இன்னும் பெண் இயற்கையிலும் அப்படியான இயல்பைக் கொண்டுதான் படைக்கப்பட்டிருக்கிறாள். இருப்பினும் பெண் தன்னை அலங்கரிக்கும் இப்பண்பை இஸ்லாம் வரவேற்று அதை ஒரு கடமையாகவும் ஆக்கியுள்ளது என்பது கண்கூடே. குறிப்பாக திருமணமான ஒரு பெண் தன்னை அலங்கரித்து அவள் கணவனை மகிழ்விப்பதை ஒரு கடமையாகவும் இஸ்லாம் கூறிக்காட்டுவது ஜபிர்(றழி) மூலம் புஹாரியில் பதிவாகியுள்ள பின்வரும் நபி மொழி மூலம் தெளிவாகிறது.

நபியவர்களுடன் நாம் ஒரு போரிலிருந்தோம். பின் நாங்கள் மதீனாவிற்கு வந்தபோது (எங்கள் வீடுகளுக்குள்) நுழையச் சென்றோம். அதற்கு நபியவர்கள் ' தலைவிரி கோலத்திலிருக்கும் பெண் தன் தலையை வார்வதற்காகவும், கணவனைப்பிரிந்த பெண் தன்னுடைய உரோமங்களை நீக்கி சுத்தம் செய்வதற்காகவும் இரவில் நீங்கள் நுழையும் வரை தாமதியுங்கள்' எனக்கூறினார்.

எனவே, இதற்கு மாற்றமாக பெண் அவலட்சனமாக இருக்கவேண்டுமென்று இஸ்லாம் கூறவில்லை. எனினும் குறிப்பிட்ட கட்டளைகளையும் சலுகைகளையயும் வழங்கி அதனூடாக மனிதன் தவறினுள் நுழைந்து விடாமல் இருக்க அதற்கான ஒரு வேலியையும் இஸ்லாம் இட்டுள்ளது. குறிப்பாக, தொழுகையைக் கூட அதற்கென ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையை இட்டு மட்டுப்படுத்தியுள்ளது. அதேபோன்றுதான் பெண் என்பவள் தன் அலங்காரத்தில் எல்லை மீறிச்சென்று ஆபாசமான தோற்றத்தையோ ஹறாமான அலங்கார முறையையோ கையாள்வதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கின்றது.

எனவே, பெண்கள் தன்னை அலங்கரிப்பதில் கவனம் செலுத்தும் சில அம்சங்களைப் பார்ப்போம்.

குறிப்பாக, பெண் தன்னை அலங்கரிப்பதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ஷரிஅத்தின் வரையறையைவிட்டும் வெளியேறியவையாக இருக்கக்கூடாது. உதாரணமாக ஒட்டுமுடிவைத்தல், பல்லைக்கூராக்கல், பச்சைகுத்தல், தலைமுடிக்குச் சாயமிடல், முடியை கட்டையாக வெட்டுதல், தலை முடியை உயர்த்திக் கட்டுதல், இமை முடியை நீக்குதல், நகங்களை நீளமாக வளர்த்தல் என்பனவற்றைக் குறிப்படலாம். இவைகள் பற்றி நபியவர்கள் கூறிருப்பதை ஒவ்வொன்றாக எடுத்து நோக்குவோம்.

02. ஒட்டு முடிவைத்தல்.

இன்றைய பெண்களில் சிலர் இயற்கை முடிகளுடன் செயற்கை முடிகளை சேர்க்கக்கூடியவர்களாக இருக்கின்றனர். இதைப் பெரும்பாலும் கலை நிகழ்ச்சி மற்றும் திருமண வைபவத்தில் ஈடுபடும் பெண்களிடமும். வயோதிபத்தின் காரணத்தால் முடிவுதிர்ந்த பெண்களிடமும் காணலாம். இதை முஸ்லிம் பெண்கள் காபீரான பெண்களை கண்மூடித்தனமாக பின்பற்றியதன் காரணமாகவும், சுன்னத்தை அறியாததன் காரணமாகவும் செய்து வருகிறார்கள இது பற்றி இஸ்லாம் என்ன கூறுகின்றது என்று நோக்கும்போது அஸ்மா பின்த் அபூபக்கர் (ரழி) அவர்கள் மூலமாக நபியவர்களைத் தொட்டும் முஸ்லீமில் பதிவாகியுள்ள ஹதீஸ் விளக்குகிறது.

'ஒரு சமயம் ஒரு பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே நிச்சயமாக எனக்கு மணம் முடிக்கப்போகும் ஒரு மகள் இருக்கின்றாள். அவளுக்கு சிரங்கு நோய் ஏற்பட்டு அவளின் தலைமுடி உதிர்ந்து விட்டது. எனவே, அவளிற்கு நான் பொய்முடி சேர்க்கவா? எனக்கேட்டாள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'அல்லாஹ் ஒட்டுமுடி சேர்ப்பவனையும், சேர்க்குமாறு வேண்டுபவரையும் சபிக்கிறான்' என்று பதிலளித்தார்கள்.'

எனவே, ஒரு பெண் தன் அலங்காரத்தை மெருகூட்ட தற்காலிய அலங்காரமான ஒட்டுமுடி சேர்த்தலை இஸ்லாம் வண்மையாக கண்டிக்கின்றது என்பது தெளிவாகின்றது.

இவ்வாறே ஒரு பெண் தன்னை அலங்கரிப்பதில் இஸ்லாத்தின் வரையறைக்கு அப்பாற்பட்ட முறைகளையும் அதன் தீர்ப்புக்களையும் அடுத்த தொடர்பில் பார்ப்போம்.

தொடரும்...........