ஷவ்வால் மாத ஆறு நோன்பு பிடிக்கலாமா? - மௌலவியா சுமையா (ஷரயிய்யா) Update Date : 07.07.2016

ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகளை நோற்கும் வழக்கம் முஸ்லிம்கள் மத்தியில் பரவலாகக் காணப்படுகின்றது.

ஆயினும் சம காலத்தில் சில அறிஞர்கள் அந்த ஹதீஸ் பலவீனமானது என மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வருகின்றார்கள் என்பதை அறியக்கூடியதாய் உள்ளது. இதனால் இந்த ஹதீஸின் நிலை பற்றி மக்கள் மத்தியில் தெளிவுபடுத்துவது எமது கடமையாகும்.

அல் ஹதீஸ்

''யார் ரமழான் மாத நோன்பை நோற்கிறாரோ அந்த ஒரு மாதம் பத்துமாதங்களுக்குச் சமனாகும். இன்னும் அவர் ரமழானின் பின்னர் (ஷவ்வால்) ஆறு நோன்பை நோற்றால் அது ஒரு வருட நோன்பை பூர்த்தியாக்குயது போன்றாகும்''

இந்த ஹதீஸ் இமாம் அஹ்மதின் முஸ்னத் அஹமத் (21825), இமாம் நசாயியின் சுனனுல் குப்ரா (2819), இமாம் இப்னு ஹிப்பானின் ஸஹீஹ் (3718), இமாம் தபரானியின் முஃஜமுல் கபீர் (1433), இமாம் பஸ்ஸாரின் முஸ்னத் (99), இமாம் தஹாவியின் முஸ்கிலுல் ஆதார் (1958), இமாம் பைஹகியின் ஷூஅபுல் ஈமான் (3452) போன்ற இன்னும் பல கிரந்தங்களில் பதிவாகியுள்ளது.

ஹதீதின் நிலைப்பாடு

இந்த ஹதீஸ் ஆதாரபூர்வமான ஒர ஹதீஸ் என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது.

இந்த ஹதீதை நபியவர்கள் கூறியதாக தவ்பான் ரழி அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

இதனை தவ்பான் ரழி வாயிலாக அபூ அஸ்மா அர் ரஹபி என்பவர் அறிவிக்கின்றார். அபூ அஸ்மா அர்ரஹபி கூறியதாக அறிவிப்பவர் யஹ்யா இப்னு ஹாரித் என்பவராவார். இவரிடம் இருந்தே இந்த ஹதீத் பலரால் பல கிரந்தங்களில் பதிவாகியுள்ளது.

குறிப்பாக முஹம்மத் இப்னு சுஅய்ப் இப்னு சாபூர், இஸ்மாயீல் இப்னு அய்யாஸ், தவ்ர் இப்னு யஸீத் போன்றோரே இந்த ஹதீதின் பிரதான அறிவிப்பாளரான யஹ்யா இப்னு ஹாரிதிடம் இருந்து அறிவிப்பவர்களாகும்.

இவ்வாறு இந்த அறிவிப்பாளர் வரிசையில் வரும் மேற்கண்ட அனைத்து அறிவிப்பாளர்களும் நம்பகமானவர்களாகும். எனவே இந்த நம்பகமானவர்களால் இடம்பெறும் தவ்பான் ரழியின் ஹதீஸ் ஆதாரபூர்வமானது என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது.

இவ்வாறே ஹதீத் கலையில் பாண்டித்தியம் பெற்ற அறிஞர் இமாம் அபூ ஹாதிம் தனது இலலுல் ஹதீத் என்ற கிரந்தத்தில் ''இந்த ஹதீஸ் ஆதாரபூர்வமானது'' என சுட்டிக்காட்டுகின்றார். இது இந்த ஹதீதின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த சிறந்த ஒரு சான்றாகும்.

மேலும் அவர் அதே கிரந்தத்தில் ''இந்த ஹதீதை ஷத்தாத் இப்னு அவ்ஸ் ரழி அவர்களும் அறிவிக்கின்றார்கள். அதுவும் ஆதாரபூர்வமான செய்தி'' என எடுத்துக்காட்டி இந்த ஹதீதின் தரத்தை மேலும் ஊர்ஜிதப்படுத்துவதை காணக்கூடியதாக உள்ளது. இருப்பினும் இந்த அறிவிப்பு எம்மிடத்தில் அறியப்படவில்லை.

விமர்சனத்தின் காரணம்

இவ்வாறு ஆதாரபூர்வமான ஹதீதை பலவீனம் என சிலர் பிரச்சாரம் செய்யக் காரணம் தவ்பான் ரழியால் அறிவிக்கப்படும் இந்த ஹதீதை மற்றொரு ஸஹாபி அபூ அய்யூப் அல் அன்ஸாரி (ரழி) அவர்களும் அறிவிக்கின்றார்கள். என்றாலும் அந்த அறிவிப்பு பலவீனமானதாகும்.

எனவே தவ்பான் ரழியின் மேற்கூறப்பட்ட அறிவிப்பை அறியாதவர்கள் அபூ அய்யூப் ரழி அவர்களின் ஆதாரமற்ற ஹதீதை வைத்து தங்கள் பிரச்சாரத்தை மேற்கொண்டிருக்கலாம். மேலதிக விளக்கத்துக்காக அந்த பலவீனமான அறிவிப்பின் விபரத்தையும் இதனுடன் இணைக்கின்றோம்.

பலவீனமான அறிவிப்பு

யார் ரமழானில் நோன்பு நோற்று பின்னர் அதனைத் தொடர்ந்ததாக ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்கிறாரோ அவர் காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போன்றவராவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இந்த ஹதீதை அபூ அய்யூப் அல் அன்ஸாரி ரழி அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

இது இமாம் முஸ்லீமின் ஸஹீஹ் (1991), இமாம் திர்மிதியின் சுனன் (689), அபூ தாவுதின் சுனன் ((2082), இமாம் இப்னு மாஜாவின் சுனன் ((1706), இமாம தாரமியின் சுனன் (1707), இமாம் அஹமதின் முஸ்னத் (22941) போன்ற இன்னும் பல கிரந்தங்களில் பதிவாகியுள்ளது.

அபூ அய்யூப் அல் அன்ஸாரி ரழி கூறியதாக இந்த ஹதீதை அறிவிப்பவர் உமர் பின் தாபித் என்பவராகும். உமர் பின் தாபித்திடமிருந்து அதை அறிவிப்பவர்கள் இருவராகும். முதலாமவர் ஸஅத் பின் ஸயீத் அல் அன்ஸாரி, மற்றையவர் ஸப்வான் இப்னு சுலைம் அல் கர்ஸீ. இவ்விருவரின் அறிவிப்புக்களும் பலவீனமானவைகளாகும்.

முதலாவது அறிவிப்பான ஸஅத் பின் ஸயீத் அல் அன்ஸாரியின் அறிவிப்பு

பலவீனத்துக்கு காரணம்

இது பலவீனமாவதற்கு காரணம் அதன் பிரதான அறிவிப்பாளர் ஸஅத் பின் ஸயீதே ஆகும். இவர் ஹதீத் கலை வல்லுனர்கள் பலரால் குறைகூறப்பட்ட  ஓர் அறிவிப்பாளராகும். ஸஅத் பின் ஸயீத் பற்றிய இமாம்களின் கருத்துக்கள்.

இமாம் நசாயீ - ''இவர் பலமானவர் இல்லை என்றும்'', இமாம் அஹமத் ''இவர் பலவீனமானவர் என்றும்'', இமாம் யஹ்யா இப்னு மயீன் ஒரு சந்தர்ப்பத்திலும் ''இவரை நம்பகமானவர்'' என்று கூறினாலும், பின்னர் இவரின் பலவீனத்தை சுட்டிக்காட்டும் விதத்தில் ''இவர் பலவீனமானவர்'' என்றும்,

இமாம் இப்னு ஹிப்பான் - ''இவர் தவறிழைக்கக் கூடிய கூடியவராக இருந்தார்'' என்றும், 

இமாம் அபூ ஹாதம் '' இவர் ஹதீதை மனனம் செய்யமாட்டார்'', கேட்டு அப்படியே சொல்வார் என்றும்

இமாம் திர்மிதி -''இவரின் மனனம் சம்பந்தமாக அறிஞர்கள் விமர்சித்துள்ளார்கள்'' என்றும் கூறியுள்ளார்கள்.

இவ்வாறே மேற்கண்ட முன்னோடிகளான இமாம்களின் கருத்துக்களை வைத்து ஆராய்ந்து தான் ஒரு முடிவு கூறும் வழக்கம் கொண்ட பிற்கால அறிஞர் இமாம் இப்னு ஹஜர் அவர்கள் - '' இவர் நம்பகமானவர் இருப்பினும் நினைவாற்றல் குறைபாடு உடையவாக இருந்தார்'' என்றும் விமர்சித்துள்ளார்.

ஆக பிரசித்திபெற்ற இந்த அறிஞர்கள் பெரும்பான்மையினரின் கருத்து இவர் பலவீனமானவர் என்பதை சுட்டிக்காட்டுவதால் இவ்வாறான ஒருவரால் அறிவிக்கப்படும் செய்தி ஆதாரத்துக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.

அடுத்து இரண்டாமவர் ஸப்வானின் அறிவிப்பு

இவ் அறிவிப்பு பலவீனமாவதற்கு காரணம் ஸப்வானிடம் இருந்து இந்த ஹதீதை கேட்டறிவிக்கும் அவரின் மாணவர் அப்துல் அஸீஸ் இப்னு முஹம்மத் அத் தராவுர்தி என்பவராகும். மேலே நம்பகத்தன்மையில் விமர்சிக்கப்பட்ட ஸஅத் இப்னு ஸயீத் என்பவருக்கு பக்கபலமாக நம்பகமான அறிவிப்பாளர் ஸப்வான் இப்னு சுலைம் இந்த ஹதீதை அறிவித்திருப்பினும் அவரின் மாணவரால் இவரின் அறிவிப்பும் ஆதாரமாக ஏற்க முடியாத ஓர் நிலையையே அடைகின்றது.

அப்துல் அஸீஸ் அத்தராவுர்தி பற்றிய இமாம்களின் கருத்து

இமாம் அபூ சுர்ஆ '' இவர் மனன சக்தி மிகக் குறைபாடுடையவராக இருந்தார்'' என்றும்

இமாம் அபூ ஹாதம் ''இவர் ஆதாரபூர்வமாக எடுத்துக்கொள்ளப்படமாட்டார்'' என்றும் 

இமாம் அஹமத் ''இவர் தனது கிரந்தத்தில் இருந்து அறிவித்தால் அது ஆதாரபூர்வமானது மாறாக வேறு யாருடையதாவதிலிருந்து அறிவித்தால் தவறிழைப்பார்'' என்றும்,

இமாம் நசாயீ ஒரு சந்தர்ப்பத்தில் ''பரவாயில்லை'' என்றும், மற்றொரு சந்தர்ப்பத்தில் ''பலமற்றவர்'' என்றும்,

இமாம் இப்னு ஸஅத் ''இவர் நம்பகமானவர் அதிக ஹதீத்களை அறிவிப்பார் என்றாலும் தவறுவிடுவார்'' என்றும் 

இமாம் இப்னு ஹிப்பான் ''தவறுவிடக்கூடியவராக இருந்தார்'' என்றும் விமர்சித்துள்ளார்கள்.

அதேபோல் இமாம் இப்னு ஹஜரும் ''இவர் நம்பகமானவர் என்றாலும் மற்றவர் கிரந்தத்திலிருந்து அறிவித்தால் தவறிழைப்பார்'' என்றும் கூறுயுள்ளார்கள். அதேவேளை இமாம் யஹ்யா இப்னு மயீன் மற்றும் அலீ இப்னு மதீனி ஆகியோர் இவரை நம்பகமானவர் எனக் கூறியுள்ளார்கள்.

முடிவு

முஸ்லீம் போன்ற கிரந்தங்களில் இடம்பெ|றும் ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகளை பிடிப்பது சுன்னத்தான காரியமட் என்பது பற்றிய அபூ அய்யூப் அல் அன்ஸாரி ரழி அவர்களின் செய்தி பலவீனமானதாக இருந்தாலும், ஆதாரபூர்வமான அறிவிப்பு வேறு கிரந்தங்களில் தவ்பான் ரழி வாயிலாக இடம்பெற்றுள்ளதால் ஷவ்வாலின் ஆறு நோன்பு நோற்பது நபிவழியே என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

குறிப்பு

இந்த நோன்பை தொடராகத்தான் பிடிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஏனெனில் தொடராக பிடிக்க வேண்டும் என்ற கருத்தை பலவீனமான அறிவிப்பே சுட்டிக்காட்டுகிறது. எனவே விரும்பியவர் ஷவ்வால் மாதத்திற்குள் நோற்பது போதுமானதாகும்.