இதுதான் இஸ்லாம் - றசானா பின்து ஸித்திக் ( ஷரயியா) -


இவ்வுலகைப் படைத்து அதில் பல்வேறுபட்ட ஜீவராசிகளை உருவாக்கி அவற்றில் மனிதனை கண்ணியப்படுத்தும் வகையில் அவனை தனது பிரதிநிதியாக தேர்ந்தெடுத்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும் உண்டாவதாக அல்ஹம்துலில்லாஹ்.

மேலும் அம்மனிதன் நெறிதவறி வழிகேட்டில் சென்று விடாமல் நேர்வழியில் தன் வாழ்வை அமைத்துக் கொள்வதற்கு அல்லாஹ் இஸ்லாமிய மார்க்கத்தை சிறந்த மார்க்கமாக அங்கீகரித்திருப்பதை அவனது திருமறை வசனம் பின்வருமாறு கூறுகின்றது.

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் (அங்கீகரிக்கப்பட்ட) மார்க்கம் இஸ்லாமாகும்' (3:19)

ஆனால் சம காலத்தில் இவ்வுலகிலுள்ள பல்லின சமுதாய மக்கள் பல்வேறுபட்ட மார்க்கங்களை சிறந்த மார்க்கங்களாக ஏற்று அவற்றை வாழையடி வாழையாக பின்பற்றிய வண்ணம் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே நாம் அம் மார்க்கங்களுடன் இஸ்லாமிய மார்க்கத்தை ஒப்பிட்டுப் பார்க்கும் வேளையில் இஸ்லாம் பல சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளதை அவதானிக்கலாம். ஆனாலும் மக்கள் எம்மார்க்கங்களின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் ஏற்றுக் கொண்டுள்ளார்களோ அவைகளனைத்தும் நன்மைகளை ஏவி, தீமைகளை தடுப்பதை அவற்றின் நூல்களில் கண்டுகொள்ளலாம்.

உதாரணமாக தீமைகளைத் தடுக்கும் விடயத்தில் சகல மார்க்கங்களும் 'விபச்சாரம்' என்ற மானக்கேடான செயலை வெறுப்பது மட்டுமன்றி அதை முற்றுமுழுதாக தடைசெய்கின்றன. இஸ்லாமிய மார்க்கம் உட்பட. ஆனால் அது உருவாகுவதற்குரிய அடிப்படைக் காரணிகளையும் சேர்த்து அழித்தொழிக்க வேண்டும் என்பதிலே முழுமூச்சாக இஸ்லாமிய மார்க்கமே செயற்படுகின்றது என்றால் அது மிகையாகாது. அதாவது விபச்சாரம் உண்டாகின்ற மூலக்காரணிகளான ஆடைக் குறைவு, அன்னிய ஆடவர்களுடனான சகபாசம் போன்றவற்றை இஸ்லாம் கண்டறிந்து விபச்சாரத்துடன் அவற்றையும் சேர்த்து ஒட்டு மொத்தமாகத் தடுக்கின்றது. எனவே மனிதனைப் படைத்த அல்லாஹ் அவனுடைய குணாதிசயங்களுக்கும், யல்புகளுக்குமேற்ப அவனுக்குப் பொருத்தமான வரையறைகளைக் கொண்ட மார்க்கமாக இந்த இஸ்லாத்தை வடிவமைத்துள்ளான்.

இந்த மார்க்கத்தின் அடிப்படையில்தான் நூஹ் (நபி) முதல் இறுதித் தூதர் முஹம்மது (நபி) வரை இறைவனால் அனுப்பப்பட்ட அனைத்து இறைத்தூதர்களும் தங்களின் பிரச்சாரப் பணியை தமது சமுகத்தாருக்கு எத்திவைத்துள்ளனர். அந்த வகையில் இறுதி (உம்மத்தாகிய) சமுதாயமாகிய எமக்கு எவரில் அழகிய முன்மாதிரி உள்ளதாக அல்லாஹ் கூறியுள்ளானோ அந்த முஹம்மது (நபி)யை இறைத் தூதராக ஏற்று அவரைப்பின்பற்றுவதன் மூலமே உண்மை இறைவிசுவாசிகளாக வாழமுடியும். அதாவது நபியவர்களுக்கு வஹீ மூலம் இறக்கப்பட்ட இறைவேதமாகிய அல்குர்ஆனையும் அவரின் வாழ்க்கை வழிமுறையான ஸுன்னாவையும் எடுத்து நடப்பதே அவரைப் பின்பற்றுவதற்கான சான்றாக அமையும். அவ்வாறு அவரைப் பின்பற்றி வாழ்வோமாயின் இறை நேசத்தையும் அவனது மன்னிப்பையும் திடனாக அடையலாம் என்பதை அல்லாஹ் திருமறையில் பின்வருமாறு கூறுகிறான்.

' (நபியே மக்களிடம்) நீர் கூறுவீராக நாங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னை நீங்கள் பின்பற்றுங்கள். (அவ்வாறு நீங்கள் செய்தால்) உங்களை அல்லாஹ் நேசிப்பான். உங்களின் பாவங்களையும் உங்களுக்காக அவன் மன்னித்து விடுவான். அல்லாஹ் மிக மன்னிப்பவன் மிகக் கிருபையுடையவன்' (3:31)

ஆகவே எமது வாழ்க்கை வழிகாட்டியாக இறைவேதத்தையும் (அல்-குர்ஆன்), நபி வழியையும் (அஸ்ஸுன்னா) பின்பற்றினால் ஈருலக வெற்றியும் எம்மை வந்தடையும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. எனவே பின்வரும் வசனம் குர்ஆனைப் பின்பற்ற வேண்டும் என்பதை எடுத்துச் சொல்கிறது.

' (மனிதர்களே) உங்களுக்காக உங்கள் இரட்சக னிடமிருந்து இறக்கி வைக்கப்பட்ட (இவ்வேதத்)தைப் பின்பற்றுங்கள். அவனையன்றி (மற்றவரையும்) உங்களுக்குப் பாதுகாவலர்(களாக ஆக்கி அவர்)களை நீங்கள் பின்பற்றாதீர்கள். (எனினும் இதைக் கொண்டு) நீங்கள் மிகக் குறைவாகவே நல்லுணர்ச்சி பெறுவீர்கள். (7:3)

அடுத்ததாக சுன்னாவை எடுத்து நோக்கினால், அது பற்றிய தெளிவான விளக்கத்தை அறிந்திருப்பது இன்றியமையாத ஒன்றாகும். குர்ஆனிலுள்ள ஸுன்னா பற்றிய வசனத்தை ஆராய்ந்தால் சுருக்கமாக அது பற்றி அல்-குர்ஆன் கூறுகையில்,

' தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை நீங்கள் (மன மொப்பி) எடுத்துக் கொள்ளுங்கள். அவர் எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ அதிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள்' (59:7)

எனவே நபியவர்கள் மார்க்கத்தோடு தொடர்புபடுத்தி எவற்றை சொன்னார்களே அல்லது செய்து காட்டினார்களோ அல்லது தீர்மானித்தார்களோ அதாவது சொல், செயல்,அங்கீகாரம் போன்றவை சுன்னாவில் உள்ளடங்கக் கூடியவை. இதற்கப்பால் உலக விவகாரங்களோடு சம்மந்தப்பட்ட விடயங்கள் (அதாவது நபியின் காலத்தில் இல்லாத நவீன வசதி வாய்ப்புக்களை தற்போது பயன்படுத்துதல்) ஒரு போதும் சுன்னாவிற்கு முரணான செயலில் சேராது.

உதாரணமாக நபியின் காலத்திலிருந்த பிரயாண முறையை எடுத்துக் கொண்டால் குதிரை, ஒட்டகம் போன்றவற்றை பிரயாணத்திற்குப் பயன்படுத்தியுள்ளனர். எனவே இவையல்லாத வீன வாகனங்களில் பிரயாணிப்பது நபி வழிக்கு மாற்றமானது என்ற வாதத்தை ஒருவர் முன்வைத்தால் அவரின் வாதம் மறுக்கத்தக்க ஒன்றாக அமையும். ஏனெனில் காலம் செல்லச் செல்ல மனிதன் சகல துறைகளிலும் காலடிபதித்து நுட்பமான ஆராய்ச்சிகளையும் புதுமையான கண்டுபிடிப்புகளையும் கண்டுபிடிக்கக்கூடியவனாக இயங்கிக் கொண்டிருக்கின்றான். இந்த நிலையில் நபி பிரயாணித்தது போன்றுதான் பிரயாணம் செய்ய வேண்டும் (அதுதான் ஸுன்னா) என்ற வாதம் எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும். ஏனெனில் அல்லாஹ் அவனது குர்ஆனில் அதைத் தெளிவாகக் கூறியுள்ளான்.

' இன்னும் குதிரைகளையும், கோவேறு கழுதைகளையும், கழுதைகளையும் அவற்றில் நீங்கள் ஏறிச்செல்வதற்காகவும் (உங்களுக்கு) அலங்காரமாகவும் (அவனே படைத்துள்ளான்) இன்னும் நீங்கள் ; அறியாதவற்றையும் அவன் படைக்கின்றான்' (16:8)

ஆனால் நபியவர்கள் கற்றுத்தந்த பிரயாணத்தின் போது ஓதவேண்டிய துஆ, கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்கு முறையெல்லாம் நபியின் ஸுன்னாவில் உள்ளடங்கும். மேலும் நபியவர்களின் அபிப்பிராயம் அதாவது அவரின் சொந்தக் கருத்து அவரின் ஸுன்னவிற்கு அப்பால்பட்ட ஒன்றாகும். தல்ஹா (ரழி) அவர்களைத் தொட்டும் வரக்கூடிய பின்வரும் சம்பவம் இதற்குச் சான்றாக அமைகின்றது. ' பேரீச்ச மரங்களின் உச்சியில் இருந்து கொண்டிருந்த (மதீனாவாசிகள்) சிலரைக் கடந்து சென்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நானும் சென்றேன். அப்போது இவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிp றார்கள் ?' என்று கேட்டார்கள்.

அதற்கு மக்கள் 'பெண் மரங்களுடன் ஆண் மரங்களை இணைத்து ஒட்டுச் சேர்க்கை செய்து (பெண் மரங்களை) சூல் கொள்ளச் செய்கின்றனர் என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ' இதனால் பயனேதும் ஏற்படும் என்று நான் கருதவில்லை' என்று சொன்னார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதைப்பற்றி (மதீனா வாசிகளிடம்) தெரிவிக்கப்பட்ட போது அவர்கள் ஒட்டுச் சேர்க்கை செய்வதை விட்டுவிட்டனர். (அந்த ஆண்டில் அவர்களுக்கு மகசூல் பாதிக்கப்பட்டது)

இது குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது அவ்வாறு செய்வதனால் அவர்களுக்கு பயன் ஏற்படுமானால் அவ்வாறு செய்து கொள்ளட்டும். நான் எனது யூகத்தையே தெ ரிவித்தேன். யூகத்தை தெரிவித்ததை வைத்து என் மீது குற்றம் சாட்டாதீர்கள். ஆயினும் நான் உங்களிடம் அல்லாஹ்வைப் பற்றி ஏதேனும் சொன்னால் அதை நீங்கள் கடைப்பிடியுங்கள். ஏனெனில் நான் வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ்வைப்பற்றி பொய்யுரைக்க ; மாட்டேன்' ; என்று சொன்னார்கள். (நூல் : முஸ்லிம்)

மேலும் நபியவர்கள் மார்க்கம் என ஒரு விடயத்தைச் சொன்னால் அது ஒரு போதும் அவருடைய சொந்தக் கருத்தாக இருக்காது. மாறாக அவருக்கு வஹி மூலம் இறக்கப்பட்ட செய்தியாகவே அதை எடுக்க வேண்டும். இதை அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்.

' அவர் தன் மன இச்சையின் படி (எதையும்) பேசுவதுமில்லை அது அறிவிக்கப்படும் (வஹியாகிய) அறிவிப்பே தவிர (வேறு) இல்லை' (53:3,4)

எனவே நபி(ஸல்) அவர்கள் ஒரு மனிதராக இருந்தாலும் அவர் எம்மைவிட பல மடங்கு சிறப்பிக்கப்பட்டு அகிலத்தோரால் நேசிக்கப்படுவதற்கான காரணம் அவர் இறைவனின் வஹியை பெற்று இறை தூதராக வாழ்ந்தது தான்.

அந்த வகையில் திருமறைக்குர்ஆனானது முஹம்மது நபி தான் இறுதித் தூதர் என ஆணித்தரமாகச் சொல்லி அவரின் மறைவிற்குப் பின் வேறு எவரும் நபியாகவோ அல்லது றஸுலாகவோ வரமாட்டார். என்பதை உறுதிப்படுத்திவிட்டது.

அதாவது சுருக்கமாகக் கூறினால் இஸ்லாமிய சட்டங்கள் அனைத்தும் எவ்வித குறைபாடுகளுமின்றி இறைவனால் பரிபூரணமாக்கப்பட்டு நபியவர்களுக்கு முழுமையாக அறிவிக்கப்பட்டுவிட்டது. அதில் எவ்வித சேர்க்கைகளையும் செய்ய வேண்டிய தேவை எவருக்குமில்லை. அதை நபியின் பிரியாவிடை ஹஜ்ஜின் போது இறங்கிய பின்வரும் அல்குர்ஆன் வசனம் உண்மைப்படுத்துகின்றது.

' இன்றைய தினம் உங்களுக்காக உங்களுடைய மார்க்கத் தை நான் பரிபூரணமாக்கி விட்டேன். என்னுடைய அருட்கொடையை உங்கள் மீது முழுமையாக்கி விட்டேன். இன்னும் உங்களுக்காக ; இஸ்லாத்தை மார்க்கமாக நான் பொருந்திக் கொண்டேன்' (5:3)

எனவே அல்லாஹ் எமக்களித்த அருட்களில் எம் மார்க்கத்தை பரிபூரணமாக்கிக் கொடுத்தது மிகவும் மகத்தான ஒரு அருளேயன்றி வேறில்லை. ஆகவே இம்மார்க்கத்தின் அடிப்படையில் எம் வாழ்க்கையை வழிநடத்துவதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் எம் அனைவருக்கும் அருள்பாலிப்பானாக.