வாசகர்களின் கேள்விகளுக்கான பதில்கள் - மௌலவி அன்சார் (தப்லீகி)

குற்றமும் தண்டனையும்:
ஒரு பெண் அல்லது ஆண் விபச்சாரம் செய்து விட்ட பின் அதிலிருந்து தௌபா செய்யும் எண்ணத்துடன் தங்கள் குற்றத்தை ஓர் பள்ளிவாயல் நிர்வாகத்திடம் தெரியப்படுத்தினார்கள். அந்தப் பள்ளிவாயல் நிர்வாகம் அவளை அல்லது அவரை மறைவான ஓர் இடத்தில் வைத்து நூறு அடி அடித்தனர். இது தொடர்பாக மார்க்கத் தீர்ப்பு என்ன?

விடை:
விபச்சாரம் செய்த ஒருவர் திருமணம் செய்தவராயின் அவரை கல்லெறிந்து கொல்ல வேண்டும். திருமணம் செய்யாதவராயின் நூறு கசையடிகளுடன் ஒரு வருடத்திற்கு நாடு கடத்த வேண்டும். இலங்கையைப் போன்று இஸ்லாமிய ஆட்சி இல்லாத நாடுகளில் இந்த்ச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அனுமதியில்லை.

அதையும் மீறி இவ்வாறான தண்டனைகளை வழங்கும் போது தண்டனை வழங்கியவர்கள் நாட்டின் சட்டத்தை மீறியவர்கள் எனக் கருதப்பட்டு அந்த நாட்டின் சட்டத்தின் படி தண்டிக்கப்படுவார்கள்.
அல்லாஹ் எந்த ஆத்மாவிற்கும் அதன் சக்திக்கும் அப்பால் கஷ்டம் கொடுக்கமாட்டான் (அல்பகறா : 286) என அவனின் திருமறையில் கூறுவதால் இது போன்ற நாடுகளில் இந்த சட்டங்களை நாம் நடைமுறைப்படுத்துவது எம்மீது கட்டாயமில்லை.

அல்லாஹ் எங்களை குற்றம் பிடிக்கமாட்டான். அல்லாஹ்வின் சட்டப்படி அவன் கூறுகின்ற பிரகாரம் தண்டனை வழங்க முடியாது என்பதற்காக நாம் நினைத்தபடி ஓர் முறையை உருவாக்கி தண்டனை வழங்கக் கூடாது. இது அல்லாஹ்வின் மார்க்கத்தில் கைபோடுவதாக அமையும்.

இது போன்ற விடயங்களுக்கு தண்டனை வழங்குவது மக்கள் மன்றத்தில் பகிரங்கமாக நடைபெற வேண்டிய விடயமாகும். அதைப் பார்க்கின்ற மக்கள் அதன் மூலம் படிப்பினை பெறுவார்கள்.

இதற்கு மாற்றமாக இரகசியமாக குற்றம் செய்தவரை ஓர் மூடப்பட்ட அறையில் வைத்து பள்ளிவாயலில் கடமையாற்றும் முஅத்தின் சில அடிகளை வழங்கிவிட்டு அவர் தௌபா செய்து கொண்டார் என்று கூறுவது ஓர் அறியாமையாகும்.

எனவே யாராவது ஒருவர் விபச்சாரம் செய்த நிலையில் தன் தவறை உணர்ந்தவராக உங்களிடத்தில் ஆலோசனை கேட்டால் அல்லாஹ்விடத்தில் அதிகமதிகம் பாவமன்னிப்புக் கேட்பதற்கு அவருக்கு அறிவுரை வழங்குங்கள்.

அவர்களும் தன் பாவத்தை எண்ணி மனமுருகி அழுதழுது நினைவு வரும் போதெல்லாம் பாவமன்னிப்புக் கேட்டுக் கொண்டே இருக்கட்டும்.

அல்லாஹ் போதுமானவன்...